Thursday, August 6, 2015

ஈரோடு மாவட்ட பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு: விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் – பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு கலெக்டர் தகவல்


ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில், பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.
தண்ணீர் திறப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசன ஆதாரங்களில் இருந்து காலிங்கராயன், அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அதனால் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் பயிர்க்கடன் வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசன பகுதியில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அதனால் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள், பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
விதை நேர்த்தி
தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கும், கீழ்பவானி பாச பகுதிகளுக்கும் ஏற்ற நெல் ரகங்களான ஏ.எஸ்.டி.–16, கோ–50, 51, 43, 48, 49, ஏ.டீ.டி–38, 39, 44, 50, வெள்ளை பொன்னி போன்ற ரகங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தினால் பரிந்துறை செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகள் விதைமூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த கட்டாயமாக விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பெவிஸ்டின் அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் மருந்தினை கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விவசாயிகள் தங்களது பகுதி வேளாண்மை துறை களப்பணியாளர்களை அணுகி இடுபொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment