Thursday, August 27, 2015

செப். 1 முதல் கால்நடைகளுக்கான வாய் நோய் தடுப்பூசி முகாம்



பெரம்பலூர் மாவட்டத்தில் செப். 1 முதல் 21 ஆம் தேதி வரை கால்நடைகளுக்கான வாய் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கால்நடைகளை தாக்கும் நோய்களில் கால் நோய், வாய் நோய் எனும் கோமாரி நோய், 63 வகையான வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிகவிரைவில் பரவக்கூடியது.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும், நாக்கிலும் கால் குழம்புகளுக்கிடையிலும் புண் ஏற்பட்டு, தீனி உட்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவதோடு, மிகவும் மெலிந்துவிடும். வெயில் காலத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூச்சிரைக்கும். தோலின் தன்மை கடினமாகவும், மேல்தோல் முடிகள் அதிகம் வளர்ந்து காணப்படும். கறவைப் பசுக்களில் பால் குடித்துவரும் கன்றுகள் இறந்துவிடும்.
எனவே, இந்நோய் தாக்காத வகையில் கால்நடைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசிப் பணிமேற்கொள்வது அவசியம். கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால் வாய் நோய்த் தடுப்புத் திட்டம் 9-வது சுற்றின் கீழ் செப். 1 முதல்  21 ஆம் தேதி வரை தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, கிராம பொதுமக்கள் தங்களது கால்நடைகளை கடுமையாக பாதிக்கும் கால் மற்றும் வாய் நோய்களிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம். இந்த முகாமில் 4 மாதம் வயதுள்ள கன்று முதல் சினை மற்றும் கறவை பசு உள்ளிட்ட அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9443397019, 9442161511 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

 Source: 

http://www.dinamani.com/edition_trichy/perambalur/2015/08/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.-1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-/article2993632.ece

No comments:

Post a Comment