Friday, August 21, 2015

கால்நடை, கோழிக்கழிவு விலை... அதிகரிப்பு: இயற்கை உரமிட விவசாயிகள் ஆர்வம்




சின்னமனூர்:தென்னை, பழ மரங்களில் நீடித்த பலன் கொடுக்கும் தொழு உரமிட விவசாயிகள் இயற்கை உரம் மீது ஆர்வம் காட்டி வருவதால் கால்நடை, கோழிக் கழிவுகள் ஒரு டன் ரூ.3 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
தோட்டக்கலை துறையின் புள்ளி விபர அடிப்படையில் 2011 ல் தேனி மாவட்ட அளவில் தென்னை 18 ஆயிரத்து 173 எக்டேரிலும், பழ மரங்கள் 19 ஆயிரத்து 152 எக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளது. கூடுதல் மகசூல் கிடைப்பதற்காக ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்தினர். மழை வளம் குறைந்து வருவதால் ரசாயன உரம் பயன்படுத்திய மரங்கள் எதிர்பார்த்த பலனளிக்கவில்லை. இயற்கையான உரமிடும் முறையில் நீடித்த பலன் கிடைப்பதாலும், வறட்சியை மரங்கள் தாங்கி கொள்வதாலும் தொழு உரமிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பதினெட்டாம் கால்வாய் விவசாயிகள் சங்க தலைவர் ராமராஜ் கூறியதாவது: தென்னை விவசாயிகளுக்கு கோடை காலத்தில் குறும்பை உதிர்வது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வறட்சியை மரங்கள் தாங்க முடியாததற்கு ரசாயன உரம் பயன்படுத்துவது காரணமாக அமைந்துள்ளது. கால்நடை, கோழிக் கழிவுகளை உரமாக பயன்படுத்தும் போது இந்த குறை நீங்குகிறது. ஒரு டிராக்டர் லோடு கால்நடை சாணம் ரூ.3 ஆயிரத்திற்கும், கோழிக் கழிவு ரூ.3 ஆயிரத்து 500 க்கும் வாங்கப்படுகிறது. இயற்கை உரமிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால் மாடு, கோழிக் கழிவுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது, என்றார்.

சென்டெக்ட் கே.வி. கே., திட்ட இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது: ஆர்கானிக் உரங்களில் மரத்திற்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், நுண்ணுயிர் சத்து சம அளவில் கிடைக்கிறது. மலிவாக கிடைக்கிறது என்பதால் விவசாயிகள் யூரியாவை அதிகளவில் பயன் படுத்துகின்றனர். இதனால் சமச்சீரான சத்துகள் மரங்களுக்கு கிடைப்பதில்லை. ரசாயன உரக்கலவை சமச்சீராக இல்லாவிட்டால் மரங்கள் பாதிப்படையும். கோடை வெப்பத்தை தாங்கும் தன்மையை இழந்துவிடும். கால்நடை பயன்பாடு குறைந்து விட்டதால், தொழு உரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மரங்களுக்கிடையே கொழுஞ்சி, அகத்தி போன்றவற்றை ஊடுபயிர் நடவு செய்து அவற்றை உழுது, மடித்து இயற்கை உரமாக மாற்றலாம், என்றார்.

Source:
 http://www.dinamalar.com/district_detail.asp?id=1324240

No comments:

Post a Comment