Sunday, August 30, 2015

சூரிய ஒளி உலர்த்தி அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


நாமக்கல் மாவட்டத்தில் சூரிய ஒளி உலர்த்தி அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமாக சூரிய மின்சக்தியை விவசாயிகள் பயன்படுத்தி பயனடையும் வகையில் 2015-16ஆம் ஆண்டில் 100 சூரிய ஒளி உலர்த்தியை அமைத்துக் கொடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் வாழைப்பழம், தக்காளி, தேங்காய், மசாலாப் பொருள்கள், கிரீன் டீ மற்றும் இதர பழங்கள், காய்கறிகளை உலர்த்த முடியும்.
ஒவ்வொரு சூரிய ஒளி உலர்த்தியும் (வரிகள் உள்பட) அதிகபட்சம் ரூ.3.97 லட்சம் மதிப்பீட்டில் அமைத்துக் கொடுக்கப்படும். இதற்கு 50 சதவீதம் அதாவது ரூ.1.84 லட்சம் வரை மானியம் அளிக்கப்படுகிறது.
இந்த அமைப்பு மூடப்பட்ட பசுமை குடில்கள் மாதிரியில் பாலிகார்பனேட் தகடுகளால் கூரை அமைத்து சூரிய ஒளியை கிரகிக்க செய்து, கூரைக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டி தட்டுகளில் வேளாண்மையால் உற்பத்தி செய்யப்பட்ட மதிப்புகூட்டப்பட வேண்டிய குறிப்பிட்ட வேளாண் பொருள்களை உலர்த்தி, பதப்படுத்தி விற்பனை செய்யலாம்.
சூரிய ஒளி உலர்த்தி தேவைப்படும் விவசாயிகள், விவசாயக் குழுக்கள் பயன்படுத்திக் கொள்ள இந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, நாமக்கல் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள், விவசாய குழுக்கள் உதவி செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல் துறை), 782-, ஆர்.எஸ்.ஆர். வணிக வளாகம், முருகன் கோயில் அருகில், சேலம் சாலை, நாமக்கல் என்ற முகவரிக்கும், உதவி செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல்), 23375, டி.என்.. வணிக வளாகம், சேலம் சாலை, திருச்செங்கோடு என்ற முகவரிக்கும் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment