Thursday, August 27, 2015

சிறு குறு விவசாயிகளுக்கு மானியங்கள்



பழநி, : பழநி பகுதியில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ஏராளமான மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 5 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ள விவசாயி சிறு விவசாயி என்றும், 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயி குறு விவசாயி என்ற அடிப்படையில் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி சிறு குறு மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளின் நிலங்களில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டை ஏற்படுத்தி தரப்பட உள்ளது. 15 மீட்டர் அகலம் மற்றும் 2 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட உள்ள பண்ணைக்குட்டை தேவைப்படும் விவசாயிகள் வேளாண் அலுவலகத்தில் விண்ணபித்தால், யூனியன் அலுவலகம் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பண்ணைக்குட்டை அமைத்து தரப்படும். தவிர, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல் விதை கிலோ ரூ.5க்கு மானியமாக வழங்கப்படுகிறது. விதை கிராம திட்டத்தின் கீழ் நெல், நிலக்கடலை மற்றும் பயறு வகை விதைகள் 50% மானியத்தில் வழங்கப்படுகின்றன.

நீர்வள நிலவளத் திட் டத்தின் கீழ் அய்யம்புள்ளி மற்றும் கணக்கன்பட்டி பகுதி விவசாயிகள் 10 அடி அகலம், 3 அடி நீளத்தில் மண்புழு கூடம் அமைக்க ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நீர்த்தெளிப்பான் மற்றும் நீர் தூவுவான் ஆகியவை 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளன. டான்கோடா திட்டத்தின் கீழ் தென்னை, மக்காச்சோளம், கரும்பு, பருத்தி மற்றும் துவரை பயிரிடும் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீர் பாசனம் ஏற்படுத்தி தரப்பட உள்ளது. இதுதொடர்பான விளக்கங்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் அலுவலரையோ அல்லது வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source:  http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=483963&cat=504

No comments:

Post a Comment