Tuesday, August 18, 2015

சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.85 கோடி கடன் அளிப்பு


திருவண்ணாமலை மாவட்ட சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 125 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.85 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசினார்.

திருவண்ணாமலை நகராட்சியைச் சேர்ந்த 18, 26 வார்டுகளில் அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் 3,097 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்களை வழங்கி அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசியது:
அதிமுக ஆட்சியில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மக்கள் சமூகத்துக்காக உழைக்கும்  காவலராக முதல்வர் ஜெயலலிதா திகழ்கிறார்.
திருவண்ணாமலை மாவட்ட சிறு, குறு விவசாயிகள் நலன் கருதி ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.85 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும், முழுமையாக நிறைவேற்றி வருகிறார் என்றார் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமை வகித்தார். சிறப்பு செயலாக்கத் திட்ட தனித் துணை ஆட்சியர் ராணி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் அ.சுல்தானா வரவேற்றார்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா, கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ ஏ.கே.அரங்கநாதன், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர்மன்றத் தலைவர் என்.பாலசந்தர், வட்டாட்சியர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source:

http://www.dinamani.com/edition_vellore/thiruvannamalai/2015/08/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.85/article2981428.ece


No comments:

Post a Comment