Wednesday, August 19, 2015

புதிய தொழில்நுட்பத்தில் நெல் சாகுபடி


    வேளாண் உற்பத்திகளில் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி முதன்மையாக விளங்குகிறது. பல்வேறு வகையான நெல் ரகங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். வருகிற சம்பா பருவத்துக்கு ஏற்ற புதிய நெல் ரகங்கள் உள்ளன. இதன் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) முருகன் கூறியது:
 புதிய நெல் ரகம் (டி.கே.எம்.13): டி.கே.எம். 13 ரகம் மத்திய வயது (135 நாள்கள்) நெல் பயிராகும். மத்திய சன்ன வெள்ளை அரிசி, இலைச் சுருட்டுப் புழு, குறுத்துப் பூச்சி, பச்சை தத்துப் பூச்சிக்கு நடுத்தர எதிர்ப்புத் திறன் கொண்டது.
 குலை நோய், துங்குரோ நோய், செம்புள்ளி நோய்க்கு நடுத்தரத் தாங்கும் திறன் கொண்டது. அதிக அரைவை திறன், முழு அரிசி காணும் திறன், சமைத்த சாதம் நீளும் தன்மை அதிகம். சிறந்த சமையல் பண்பு, அதிக மகசூல் (ஒரு ஹெக்டேருக்கு 5.5 முதல் 6.5 டன்கள்). இந்தப் புதிய நெல் ரகத்தை திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிட்டால் கூடுதல் மகசூல் பெற முடியும்.
 திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்: தமிழக வேளாண்மையில் நெல் சாகுபடி ஒரு முக்கிய அங்கமாகும். கடந்த சில ஆண்டுகளாக மொத்த ஆண்டு நெல் உற்பத்தியில் ஒரு தேக்க நிலையில் இருந்து வருகிறது. மக்கள்தொகை தொடர்ந்து பெருகி வருவதால், நெல் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
 நெல் சாகுபடியில் மற்றொரு கவலைக்குரிய நிலை சாகுபடிக்குத் தேவையான நீரின் அளவு குறைந்து பற்றாக்குறை இருப்பதுதான். ஆகையால், நெல் சாகுபடியில் தற்போதைய தேவை, குறைந்த நீரில் அதிக உற்பத்தித் திறன் கொடுக்கக் கூடிய திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்ப முறை.
 திருந்திய நெல் சாகுபடி என்பது சிக்கன நீர்ப்பாசனத்தில் இளநாற்றை அதிக இடைவெளியில், சதுரமுறையில் நடவுசெய்து களைக்கருவியை உபயோகித்து விளைச்சலை அதிகரிக்கும் மாற்று நெல் பயிர் சாகுபடி முறையாகும். இந்த தொழில்நுட்ப நடைமுறை சாகுபடி சிபாரிசுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். ஆனால், இந்தச் சாகுபடி முறையால் மகசூல் அதிகரிப்பது மட்டுமல்லாமல் வேறு பல நன்மைகளும் விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
 சிக்கன நீர்ப்பாசனம் மூலம் பாசன நீர் தட்டுப்பாட்டைக் குறைக்கும் உத்தியாக மண்ணில் காற்றோட்டத்தையும், நுண்ணுயிர் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காகவும், தழைச்சத்து தேவையைக் குறைப்பதற்காகவும், நெல்லுடன் வளரும் களைகளை இயற்கை உரமாக மாற்றுவதற்காகவும் விதை நெல்லின் அளவை வெகுவாக குறைப்பதற்காகவும், அதிக தூர்கள், அதிக வேர் வளர்ச்சி கூட்டுப் பயனால் விளைச்சல் அதிகமாகி அதிக லாபம் பெறலாம்.
 திருந்திய நெல் சாகுபடியின் முக்கிய அம்சங்கள்: 14 நாள்கள் வயதுடைய வாளிப்பான நாற்றுகளை நடுதல், ஒரு குத்துக்கு ஒரு நாற்றை சதுர முறையில் நடுதல், அதிக இடைவெளி விட்டு சதுர நடவு (25-க்கு 25 செ.மீ.), கோனோவீடர் மூலம் களைகளை அமுக்கி சேற்றை கலக்குதல். நீர் மறைய நீர் கட்டி பாசன நீரின் அளவைக் குறைத்தல். பச்சை வண்ண இலை நிற அட்டை மூலம் தழைச்சத்தை நிர்வகித்தல்.
 நாற்றாங்கால் தயாரிப்பு: நடவு வயலின் ஓரத்தில் 1-க்கு 5 மீட்டர் அளவுள்ள 8 மேடைகளை தகுந்த இடைவெளியில் உருவாக்க வேண்டும். மேடைகளை தகுந்த இடைவெளியில் உருவாக்கும்போது இடையே இருக்கும் மண்ணை வெட்டி எடுத்து மேடையை அமைக்க வேண்டும். நிலப்பரப்புக்கு 5 செ.மீ. உயரம் மேடை அமைத்த பின் மேடை மேல் பாலிதீன் தாளையோ அல்லது பிரித்த உரச்சாக்குகளையோ பரப்பிவிட வேண்டும்.
 பிறகு நாற்று மேடை ஒன்றுக்கு 95 கிராம் வீதம் 8 நாற்று மேடைகளுக்குத் தேவையான 760 கிராம் டி.ஏ.பி. உரத்தை நன்கு பொடி செய்து மண்ணுடன் கலந்து நாற்று மேடைகளில் 4 செ.மீ., உயரத்திற்கு நிரப்பிவிட வேண்டும். பின் மூங்கில் குச்சிகளை மேடை ஓரங்களில் படுக்கையில் ஊன்றிவிட்டால் மண்மேடை ஓரங்களிலிருந்து கரைந்து விடாமல் இருக்கும். முளைகட்டிய விதையை (ஒவ்வொரு 5 செ.மீ. மேடைக்கு 375 கிராம் விதை) பரவலாக விதைக்க வேண்டும்.
 நாற்று மேடையை காய்ந்த மண் கொண்டு தயாரித்தால் விதைத்தபின், விதைகள் மூடியிருக்குமாறு 1 செ.மீ. உயரத்திற்கு மண்ணைத் தூவி விடலாம். பூவாளி கொண்டு நீர் தெளிக்கலாம். சுற்றியிருக்கும் பள்ளங்களில் நீர் நிரப்பலாம். பிறகு நாற்றாங்காலை வழக்கமான முறையில் பராமரிக்க வேண்டும்.
 நடவு வயல், நாற்று நடவு: நடவு வயல் தயாரிப்பில் திருந்திய நெல் சாகுபடிக்கான மாற்றங்கள் ஏதும் இல்லை. நடவுக்கு 10 நாள்களுக்கு முன்பாக நடவு வயலில் ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரத்தை சீராகப் பரப்பி நீர்ப்பாய்ச்சி சேறு உழவு செய்ய வேண்டும். 15 நாள்கள் வயதுடைய நாற்றுகளை நடவுக்கு உபயோகிக்க வேண்டும்.
 நாற்றுகளை பத்தைகளிலிருந்து பிரித்து எடுத்து 25-க்கு 25 செ.மீ. இடைவெளியில் ஒவ்வொரு நாற்றாக சதுர நடவாக நட வேண்டும். வேர்கள் மேல்நோக்கி இல்லாமல் 3 செ.மீ. ஆழத்துக்கு மிகாமல் மேலாக நடவு செய்ய வேண்டும்.
 இவ்வாறு நடவு செய்வதற்கு நடவுக் கயிற்றில் 25 செ.மீ. இடைவெளியில் அடையாளத்துக்கு கலர் துண்டு துணிகளைக் கட்டி, நடவுக் கயிற்றை 25 செ.மீ. எனற அளவில் மாற்றி மாற்றி போட்டு நடவு செய்யும்போது 25-க்கு 25 செ.மீ. அளவில் இடைவெளி அமையும். களைக்கருவி உபயோகிப்பது அவசியமாதலால் வரிசை சதுர நடவு முக்கியமானதாகும்.
 நீர் மேலாண்மை: 2-க்கு 2.5 செ.மீ. உயரம் நீர் கட்டி, பின் மண்ணின் மேல்பரப்பில் லேசான கீரல் வெடிப்புகள் தோன்றியபின் மறுபடியும் 2-க்கு 2.5 செ.மீ அளவுக்கு நீர் கட்ட வேண்டும். இந்த முறையை பஞ்சு கட்டும் பருவம் வரை மட்டும் செய்ய வேண்டும். அதன் பிறகு, அறுவடைக்கு முன்பு வரை 2-க்கு 2.5 செ.மீ. நீர் கட்டி மண்ணின் மேற்பரப்பில் நீர் மறைந்தபின் மண்ணைக் காயவிடாமல் மறுபடியும் அதே அளவு நீர்கட்ட வேண்டும்.
 களை நிர்வாகம்: திருந்திய நெல் சாகுபடியில், களைகளை அவைகளின் இளம் பருவத்திலேயே மண்ணிலேயே அமுக்கி
 விடப்படுவதால், களைகளால் எடுக்கப்படும் சத்துக்களின் அளவு குறைந்து, நெற்பயிருக்கு சத்துக்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், சத்துக்கள் அனைத்தும் அந்த மண்ணிலேயே சேர்க்கப்படுகின்றன.
 உருளும் களைக்கருவி (ரோட்டரி வீடர்) கொண்டு நட்ட 15, 25, 35 நாள்களில் செடிகளுக்கு ஊடே குறுக்கும் நெடுக்குமாக உபயோகித்தல் வேண்டும். சீரான அளவு நீர் இருக்கும்போது களைக் கருவியை உபயோகிக்க இலகுவாக இருக்கும்.
 ஊட்டச்சத்து மேலாண்மை: நெல்லைப் பொறுத்தவரை தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, துத்தநாகம் ஆகியவை முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆகும். திருந்திய நெல் சாகுபடியில் தழைச்சத்து மேலாண்மை மாற்றியமைக்கப்பட்டு பயிருக்குத் தேவையாக இருந்தால் மட்டுமே மேலுரமாக தழைச்சத்து அளிக்கும். இந்தத் தொழில்நுட்பம் இலை நிற அட்டையை உபயோகப்படுத்தி செய்யப்படும்.
 நெற்கதிர் எண்ணிக்கை, மகசூல்: ஒரு குத்தில் அதிகபட்ச அளவு மொத்த தூர்கள் (40 முதல் 45) உண்டாக வாய்ப்புண்டு. ஒவ்வொரு கதிரிலும் மணிகள் அதிக எண்ணிக்கை இருக்கும். சரியான ஊட்டச்சத்து நிர்வாகத்தினால் ஏக்கருக்கு 4.0 - 4.5 டன் வரை மகசூல் கிடைக்கின்றன.
 திருந்திய நெல் சாகுபடியில் விவசாயிகள் பெறும் பலன்கள்: குறைந்த விதையளவு, நாற்று பறிக்கும் செலவு குறைவு. களைக் கொல்லி தேவையற்றது. உருளும் களைக்கருவி உபயோகிப்பதால் கூட்டுப் பயன்கள், 50 சதம் வரை நீர் சேமிப்பு, கதிர்கள், தானியங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நெல், வைக்கோல் விளைச்சல் அதிகரிப்பு, அதிக வருமானம் ஈட்டமுடியும். மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 044 - 2745 2371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Source:

No comments:

Post a Comment