நாட்டின் 69-ஆவது சுதந்திர தினத்தை அண்மையில் கொண்டாடி முடித்துள்ளோம் என்பது மகிழ்ச்சியான ஒன்றுதான். நாடு இதுவரை பயணித்த, சாதித்த, சந்தித்த, இன்னும் சென்று சேர வேண்டிய விஷயங்களை அரசு பட்டியலிட்டுள்ளதும் வரவேற்கத்தக்கதே.
ஆனால், அண்மையில் வெளியான தகவல் நாடு சாதித்த விஷயங்களுக்கு கரும்புள்ளியாக அமைந்திருக்கிறது. கடந்த 9-ஆம் தேதி சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள தகவல்தான் அது.நம் நாட்டில் 21 கோடிப் பேர் தினமும் பசியோடு உறங்கச் செல்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் அவர். உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றிருந்தாலும், சற்று ஆழமாக யோசிக்க வேண்டிய விஷயம் இது.
அதே நிகழ்ச்சியில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் ஜெயராம் ரமேஷ், "அடுத்த 35 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியைத் தாண்டும். அதைக் கருத்தில் கொண்டு நமது உணவு உற்பத்தியைத் திட்டமிட வேண்டும். உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றாலும், நமது பொது விநியோக முறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்' என்றார். பொது விநியோக முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது உண்மையே.
ஆக்ஸ்போர்டு வறுமை, மனித மேம்பாட்டு முயற்சி (Oxford Poverty and Human Development Initiative) என்ற ஐ.நா. ஆதரவு பெற்ற அமைப்பு அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரம் மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் பிகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஸô, ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.
மகாராஷ்டிரத்தில் ஒரே குடும்பத்தில் ஏழெட்டு பேர் இருந்தால், இருக்கும் உணவை அந்த எட்டு பேருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தால் ஒருவருக்கும் வயிறு நிரம்பாது என்பதால், சுழற்சி முறையில் இருவர் மட்டும் திருப்தியாக சாப்பிடுவார்களாம். சாப்பிட்ட அந்த இரண்டு பேரும் வேலைக்குச் சென்று வருவார்கள். அடுத்த நாள் அடுத்த இரண்டு பேருக்குச் சாப்பாடு.
இப்படி சுழற்சி முறையில் பட்டினி கிடக்க வேண்டிய அவலம் மகாராஷ்டிரத்தின் பெரும்பாலான கிராமப் புறங்களில் வசித்துவரும் குடும்பங்களில் நிலவுவதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தானில் உணவில்லா குடும்பத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் இன்றைக்கு யார் பட்டினி இருப்பது என்று முடிவு செய்து, தங்களுக்கிடையே சுழற்சி முறையில் மாற்றிக் கொள்கிறார்கள்.
இப்படி ஆந்திரம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் உணவு நெருக்கடிக்கு சில குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளன.
உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஒடிஸôவின் கிராமப்புறங்களில் 43% பேரும், பிகாரின் கிராமப்புறங்களில் 41% பேரும் வறுமையில் உள்ளனர் என்பது இன்னோர் அதிர்ச்சித் தகவல்.
நாட்டில் ஒருபக்கம் ஒரு வேளை உணவுக்காக ஏழை, எளிய மக்கள் தவித்துக் கொண்டிருக்கையில், மறுபுறம் தானிய சேமிப்புக் கிடங்குகளின் முறையான பராமரிப்பு, எண்ணிக்கை, அவற்றைப் பாதுகாத்தல் போன்ற பிரச்னைகளால் உணவு தானியங்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றன என்ற பதைபதைக்கும் தகவலும் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் உள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளில் 70 சதவீதம் அரசினுடையவை. அதில் உணவு தானியங்களை இருப்பு வைக்க போதுமான இடமில்லாமல், திறந்தவெளியில் அவற்றைக் கொட்டிவைப்பதால் பல லட்சக்கணக்கான டன் உணவு தானியங்கள் வீணாகின்றன.
அரசுக் கிடங்குகளில் பராமரிப்பற்ற முறையில் வீணாகும் உணவு தானியங்களை நலிந்த ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்கலாம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் கண்டிப்போடு
அறிவுறுத்தியது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல் விழலுக்கு இறைத்த நீரானது.
உணவு தானியங்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் கடந்த 5 ஆண்டுகளில் 56 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வீணாகியிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசு பதில் அளித்துள்ளது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் மிக அதிகமாக 40 ஆயிரம் டன் தானியங்கள் வீணாகியுள்ளன.
எனினும், போதிய இடவசதி, பாதுகாப்பு, கையாளல் ஆகியவை மட்டுமே இழப்புக்கு காரணமல்ல. முறையற்ற பராமரிப்பால் எலிகள், பறவைகளால் ஏற்படும் சேதாரங்களும் இதில் அடக்கம்.
சில தானியக் கிடங்குகளில் பறவைகள் கூடுகட்டி வசிப்பதால், அவற்றின் எச்சம், இறக்கை உதிர்தல், உண்பதற்காக சாக்கை ஓட்டை இடுதல் போன்றவற்றாலும் தானியங்கள் வீணாகின்றன. எலிகளால் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.2,500 கோடி பெறுமானமுள்ள உணவுப் பொருள்கள் சேதமாகின்றன.
இந்தியாவின் மக்கள்தொகை 30 கோடி இருக்கும்போதே பாரதி கூறினார், "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று. ஆனால், இந்தியாவின் இன்றைய மக்கள்தொகை 127 கோடி. அன்றும் வறுமை, இன்றும் வறுமை. அது தொடர்கிறது என்பது வேதனையிலும் வேதனை. இதை என்னென்று சொல்வது?
மேலே பட்டியலிடப்பட்ட, வீணாகும் உணவு தானியங்களைப் பாதுகாப்பதை உறுதி செய்தாலே இவர்களின் பட்டினி நீங்கிவிடும்.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன் என்கிறார் வள்ளுவர்.
செய்வார்களா ஆட்சியாளர்கள்?
Source:
No comments:
Post a Comment