திண்டுக்கல்,
சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளை பயிரிட்டால் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என கலெக்டர் ஹரிகரன் தெரிவித்து உள்ளார்.
உரங்கள் இருப்பு
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 328.6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாக வேண்டும். இந்த ஆண்டு 449.28 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 120.68 மில்லி மீட்டர் அதிகமாகும். மாவட்டம் முழுவதும் உள்ள 91 ஆயிரத்து 488 பாசன கிணறுகளில் சுமார் 10 சதவீத கிணறுகளில் 3 மணி நேரமும், 20 சதவீத கிணறுகளில் 2 மணி நேரமும், 50 சதவீத கிணறுகளில் ஒரு மணி நேரமும், 20 சதவீத கிணறுகளில் அதற்கும் குறைந்த அளவு பாசனம் வழங்குவதற்கு தேவையான நீர் உள்ளது.
தற்போது, பருவமழை தொடங்க உள்ளது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவு மற்றும் விதைப்பு பணிகளை மேற்கொள்ளலாம். விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையான அளவு வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு மானியம்
மத்திய அரசு திட்டமான தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.5–ம், நெல் விதை வினியோகத்துக்கு கிலோவுக்கு ரூ.10–ம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதே போல், எந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இதே போல், சிறுதானிய இயக்க திட்டத்தின் கீழ் கம்பு, சோளம் விதைகள் உற்பத்தி செய்பவர்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
இதே போல், வரப்பு பயிராக உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, துவரை உள்ளிட்டவற்றை விதைக்கும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.100–ம், பயறு வகைகள் உற்பத்தி மானியமாக ரூ.25–ம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள், பயறு வகைகள், செயல்விளக்கம் அமைத்திட ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் இடுபொருட்கள் மானியமாக வழங்கிட இலக்கு வரப்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்த திட்டங்களை அறிந்த விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2015/08/30025642/If-cultivated-milletsFarm-subsidiesInformation-collector.vpf
No comments:
Post a Comment