Wednesday, August 19, 2015

இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம்: விவசாயிகளுக்குப் பயிற்சி



சிதம்பரம் அருகே உள்ள பங்கிப்பேட்டை வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குநர் சு.ரமேஷ் முன்னிலை வகித்தார். வட்டார விவசாய ஆலோசனைக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அட்மா திட்ட துணை இயக்குநர் க.இளங்கோ பயிற்சியை தொடங்கி வைத்து,  இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டியதன் அவசியம் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் அவர் இயற்கை முறை சாகுபடி பற்றிய பயிற்சிக் கையேட்டினை வெளியிட்டார்.
வேளாண் அலுவலர் தி.அமுதா, இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளின் விற்பனைக்கு உள்ள சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கினார். இந்திய பாரம்பரிய அறிவியல் நிலைய இயக்குநர் சுபாஷின், காய்கறி தோட்ட அமைப்பு, இயற்கை முறையில் காய்கறி பயிர்களை பயிரிடுதலும், பராமரித்தலும், இயற்கை முறையில் இடுபொருள்கள் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், மாடித்தோட்டம், தொட்டித்தோட்டம் அமைக்கும் முறைகள் குறித்துப் பயிற்சி அளித்தார்.
முகாமில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல தோட்டக்கலைத்துறை பேராசிரியர் கருப்பையா, இந்திய பாரம்பரிய அறிவியல் நிலையம் பிரபு, தோட்டக்கலைத்துறை வேளாண் அலுவலர் பாலகுரு உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
ஏற்பாடுகளை அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தசெல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர் பழனிவாசன், மனோஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Source:

http://www.dinamani.com/edition_villupuram/cuddalore/2015/08/20/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B/article2983966.ece

No comments:

Post a Comment