Thursday, August 6, 2015

நவீன தொழில்நுட்பங்கள் மூலமே வேளாண் உற்பத்தியை அதிகரிக்க முடியும்: ஆட்சியர்


நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவன் மூலமே, வேளாண் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்தார்.
  காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில், காரீப் முன்பருவகால விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் முகாமைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
  குறைந்த நீரைப் பயன்படுத்தி, வறட்சியை தாங்கி அதிக லாபம் தரும் பயிர் வகைகளை தேர்வு செய்து, விவசாயிகள் சாகுபடி செய்யவேண்டும். சிறுதானியங்களுக்கு அதிக வரவேற்புள்ளதால், அதனை இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்து பொருளாதார மேம்பாடு அடைவதற்கு விவசாயிகள் முயற்சிக்கலாம்.
  அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, நவீன தொழில்நுட்ப முறைகள் மூலம் காரீப் பருவத்தில் வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும் என்றார் அவர்.
  பல்கலை. துணைவேந்தர் சு. நடராஜன் பேசியது: சாகுபடி செய்யும் பயிர் வகைகளுக்கு தேவையான இடுபொருள்கள், பாதுகாப்பு மருந்து, விலை விவரம் போன்ற தகவல்களை முன்பே சேகரித்து, அதற்கு ஏற்றவாறு திட்டமிடுவது அவசியம். இதனால் இழப்புகளைத் தவிர்த்து, லாபம் பெறலாம்.
  மேலும், பாரம்பரிய வேளாண்மைச் செயல்பாடுகளோடு, நவீன  தொழில்நுட்பங்களையும் அறிந்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும், ஒரு வேளாண் விஞ்ஞானியை போல் செயல்பட வேண்டும் என்றார்.
  முகாமில், இணை இயக்குநர் வேளாண்மைத் துறை ந. சம்பத்குமார், துணை இயக்குநர் (தோட்டக்கலைத் துறை) என். ராமநாதன், திட்ட ஒருங்கிணைப்பாளர் அ. உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Source : Dhinamani

No comments:

Post a Comment