இதுகுறித்து, பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் அசோக் வெளியிட்ட செய்தி: நடப்பு சம்பா பருவத்தில், மேட்டூர் கிழக்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிபாளையம் பகுதியில், 11 வருவாய்க் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயனடைவர்.
விவசாயிகளின் விதைத் தேவையைப் பூர்த்தி செய்ய, பள்ளிபாளையம், வெப்படை, குமாரபாளையம் வேளாண்மை விரிவாக்க மையங்களில், 40 டன் விதை நெல் இருப்பில் உள்ளது.
இந்த விதை நெல்லானது, மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோலவே, இயந்திரம் மூலம் நடவு செய்யப்படும் விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பயறு வகை உற்பத்தி திட்டத்தின்கீழ், இலை வழியாக உரம் தெளிப்பதற்கு, ஹெக்டேருக்கு ரூ.650 மானியம், எண்ணெய்வித்து திட்டத்தின் கீழ், திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்த, ஹெக்டேருக்கு ரூ.1,500 மானியம் வழங்கப்படுகிறது.
கரும்பு சோகையைப் பொடியாக்கி, நிலப் போர்வையாக இடும் திட்டத்துக்கு, ஹெக்டேருக்கு ரூ.2,500 மானியம் வழங்கப்படுகிறது. பசுந்தாள் உரப்பயிரை சாகுபடி செய்து, மண் வளத்தை மேம்படுத்திடும் திட்டத்தின் கீழ், ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியங்களைப் பெற, விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெயர் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment