கோவை மாவட்டத்தில், ஆறு ஒன்றியங்களில் முதன்முதலாக, மானியத்துடன் கூடிய சொட்டு நீர் பாசனத்தில், பருத்தி சாகுபடி துவங்குகிறது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட கோவையில், ஒரு காலத்தில் பஞ்சாலை தொழில் கொடிகட்டி பறந்தது. பெரும்பாலான பஞ்சாலைகள் முடங்கிய நிலையில், தற்போதும் பல இடங்களில் பஞ்சாலைகள் செயல்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் அதிகமாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டதே இத்தொழில் முன்னேற முக்கிய காரணமாகும். எனினும் தற்போது, ஆனைமலை, பொள்ளாச்சி தெற்கு, வால்பாறை, மேட்டுப்பாளையம், காரமடை ஒன்றியங்களில் பருத்தி சாகுபடி இல்லை. இன்றைய நிலையில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, மதுக்கரை, அன்னுார், எஸ்.எஸ்.குளம் உட்பட ஆறு ஒன்றியங்களில் மட்டும் பருத்தி அதிக பரப்பளவில் சாகுபடியாகிறது.
இந்த ஆறு ஒன்றியங்களிலும், பருத்தி சாகுபடியை மேலும் பல எக்டர்களுக்கு அதிகரிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, குறிப்பிட்ட ஆறு ஒன்றியங்களிலும் சொட்டு நீர் பாசனத்தில் பருத்தி சாகுபடி திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
முதன் முதலாக சொட்டு நீர் பாசனத்தில் சாகுபடி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளிடையே ஆர்வத்தை துாண்டும் வகையில் மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஒன்றியங்களிலும், 15க்கும் மேற்பட்ட எக்டர்களில் பருத்தி சாகுபடி அதிகரிக்கப்படுகிறது. குறிப்பாக பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 19 எக்டருக்கு பருத்தி சாகுபடி விரிவுபடுத்தப்படுகிறது.
இதில், சிறு,குறு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, எக்டருக்கு சாகுபடி மானியமாக, 85 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதேபோல் பெரும் விவசாயிகளுக்கு எக்டருக்கு, 64 ஆயிரம் ரூபாய் மானியம் அளிக்கப்படுகிறது.
பருத்தி நடவு, உயிர்உரமிடுதல், மருந்து தெளிப்பு, நுண்ணுாண்டம் வழங்கல், ஊடுபயிர் சாகுபடி, நுனி கிள்ளுதல், விதை சேகரித்தல் உள்ளிட்ட திட்டங்களும் பருத்தி சாகுபடியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர் உமாராணி தெரிவித்தார்
No comments:
Post a Comment