Wednesday, August 12, 2015

சம்பா நடவுக்கு விதை நெல், இடுபொருட்கள்...தயார்:உற்பத்தியை அதிகரிக்க வேளாண் துறை ஆயத்தம்


 


பதிவு செய்த நாள்

12ஆக
2015 
04:14
கடலூர்:மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உள்ளதால், கடலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்திற்குத் தேவையான விதை நெல், இடுபொருட்கள் மற்றும் ரசாயன உரங்கள் போதிய அளவிற்கு இருப்பு வைக்க வேளாண் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விவசாயமே பிரதான தொழிலாகக் கொண்ட கடலூர் மாவட்டத்தில், 2 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. மாவட்டத்தின் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும்.
ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் 12ல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடவில்லை.
இதனால், டெல்டா பாசன பகுதிகளில் குறுவை சாகுபடி பாதித்தது.
தென்மேற்கு பருவமழை காரணமாக, அணையில் நீர் மட்டம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து முதல்வர் உத்தரவின் பேரில் 58 நாட்கள் தாமதமாக, கடந்த 9ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதனையொட்டி நாளை (13ம் தேதி) கல்லணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்த விடப்பட உள்ளது. இதனால், கடலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, சம்பா நடவிற்கு நிலங்களை தயார் படுத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
கல்லணை வழியாக கீழணைக்கு வரும் தண்ணீர் செப்டம்பர் முதல் வாரத்தில், வீராணம் ஏரி வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதால், இந்தாண்டு மாவட்டத்தில் கூடுதல் மகசூல் பெற வேளாண் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மாவட்டத்தில் டெல்டா பாசன பகுதியில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தாலும், மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால், ஆழ்குழாய் கிணறு வசதி உள்ளவர்கள் மட்டுமே நாற்று விட்டுள்ளனர். பிற விவசாயிகள் தண்ணீர் வந்த பிறகு நேரடி நெல் விதைப்பு முறையில் பயிரிட முடிவு செய்துள்ளனர்.
மாவட்ட விவசாயிகள், சம்பா நடவிற்கு ஆயத்தமாகி வருவதைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான விதை நெல், இடுபொருட்கள், நுண்ணுயிர் உரம் மற்றும் ரசாயன உரங்கள், விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க போதிய அளவிற்கு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்சம்பா பருவத்திற்கான வெள்ளைப் பொன்னி, சாவித்திரி, பி.ப்பி.டி.5204 ரக விதை நெல்களும், மத்திய கால ரகமான ஏ.டி.ட்டி-39, ஏ.டி.ட்டி.38, ஏ.எஸ்.டி.19 ரக நெல் மாவட்ட விவசாயிகள் அதிகம் பயிரிடுவர்.
அதனையொட்டி பழைய ரகங்களான பி.ஆர்-1009, பி.ப்பி.டி -5204, வெள்ளைப் பொன்னி, ஏ.டி.ட்டி-39, ஏ.டி.ட்டி-43, கோ-39, கோ-43 விதைகளும், புதிய ரகங்களான கோ-49, கோ-50, சொர்ணா சப்-1, என்.எல்.ஆர்-34449 விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் 800 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் விற்பனையாளர்களிடமும் போதிய அளவு விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்கள் 2 லட்சம் பாக்கெட்களும், நெல்லுக்கு பயன்படுத்தும் நுண்ணுரம் 15 டன், பயிறு வகைகளுக்கான நுண்ணுரம் 6 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரசாயன உரங்களான யூரியா 4,000 டன், சூப்பர் பாஸ்பேட் 500 டன், காம்ப்ளக்ஸ் 3,147 டன், பொட்டாஷ் 1267 டன், டி.ஏ.பி. 1310 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment