பிரதமரின் விவசாயத்திற்கான நீர் பாசனத் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இத்திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன வசதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு பயிரின் இடைவெளிக்கு ஏற்றவாறு ஹெக்டேருக்கு அதிகபட்ச மானியமான ரூ. 85,400 வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
நிகழாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு என சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர்பாசனம் ஆகியவை அமைக்க மொத்தம் ரூ.46.33 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இதேபோல் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.2.43 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் நில ஆவணங்கள், இருப்பிடச் சான்று (குடும்ப அடையாள அட்டை) சாதிச்சான்று, சிறு,குறு விவசாயி எனில் வட்டாட்சியர் சான்று, பாசன ஆதாரத்திற்கான சான்று, மண் மாதிரி மற்றும் பாசன நீர் மாதிரி ஆய்வு முடிவு ஆகிய ஆவணங்களுடன் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் சிவகங்கை தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடையலாம் என்றார் அவர்.
Source : Dinamani
No comments:
Post a Comment