திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மனிதனின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற புரதச்சத்து நிறைந்த உளுந்து பயிரில் அதிக மகசூல் எடுக்க வேண்டுமெனில் பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் 2 சத டிஏபி கரைசல் 2 முறை தெளிப்பது அவசியமாகும். மணிச்சத்து கொடுக்கக்கூடிய டிஏபி உரக்கரைசல் தெளிப்பதால் சராசரியாக 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் எடுக்க முடியும். அத்துடன் விதை மணிகள் அனைத்தும் பொக்கு இல்லாத சுருக்கம் இல்லாத கோடையில்லாத மற்றும் நல்ல தரமுடையதாகவும், திரட்சியானதாகவும், எடை நிறைந்தவையாகவும் இருக்கும். இதனால் உளுந்து பயிரில் டிஏபி கரைசல் தெளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் 50 சதவீத மானியத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. அதன்படி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் பயறு இயக்கம் என்ற துணை திட்ட தலைப்பின்கீழ் திருவோணம் வட்டாரத்தில் 2 சதவீத டிஏபி கரைசல் தெளிப்பு திட்ட இனம் செயல்படுத்துவதற்கு பொருள் இலக்காக 150 எக்டேரும், நிதி இலக்காக ரூ.97,500ம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு எக்டேருக்கு தேவைப்படும் 25 கிலோ டிஏபி உரத்தை பனிரண்டரை கிலோ வீதம் பூக்கும் பருவத்தில் 30-35வது நாள் ஒரு முறையும் மீதி பணிரண்டரை கிலோவை 10 நாள் கழித்து 40-45வது நாள் காய்பிடிக்கும் பருவத்தில் ஒரு முறையும் என 625 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு எக்டேர் பரப்பில் தெளிக்க வேண்டும். டிஏபி உரத்தை உங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முழு விலையில் பெற்று உரம் வாங்கியதற்கான ரொக்க ரசீது பட்டியலை வேளாண்மை உதவி அலுவலரை சந்தித்து ஒப்படைப்பதுடன், முறையான மானிய கோரிக்கை விண்ணப்பம் பெற்று அத்துடன் உளுந்து சாகுபடி செய்தற்கான ஆவணங்களை தர வேண்டும். அலுவலக கூர்ந்தாய்வுக்கு பின்னர் டிஏபி உரத்தின் முழு விலையில் 50 சதவீதம் (அல்லது) ஒரு எக்டேருக்கு ரூ.650 இதில் எது குறைவோ அது விவசாயிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வரவு வைக்கப்படும். எனவே மேற்படி திட்டத்தின்கீழ் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் உங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர் (அல்லது) திருவோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment