முருங்கை ஈர்க்கை பயன்படுத்தி சளி, இருமலை போக்கும் ரசம் தயாரிக்கலாம். முருங்கை ஈர்க்கு என்பது முருங்கை கீரைகளை எடுத்துவிட்டால் கிடைக்கும் குச்சிகள். இதை சிறு துண்டுகளாக வெட்டி எடுக்கவும். இதனுடன் 4 பல் பூண்டு சேர்த்து தட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் விடவும். நெய் உருகியதும் தாளிக்க கடுகு சேர்க்கவும். கடுகு பொறிந்ததும் இஞ்சி துண்டுகள் சேர்க்கவும். பூண்டு, முருங்கை ஈர்க்கு சேர்த்த கலவை போடவும். பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
சிறிது மஞ்சள்பொடி சேர்க்கலாம். இதனுடன் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்த கலவையை சேர்த்து வதக்கவும். பின்னர், உப்பு சேர்த்து தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். முருங்கை ஈர்க்கு ரசத்தை சாப்பிட்டு வந்தால், மார்கழி, தையில் வரும் சளி, இருமல், காய்ச்சல் தடுக்கப்படும். செரிமான சக்தியை தூண்டுகிறது. முருங்கை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. உணவிலேயே முக்கியத்துவம் பெற்ற முருங்கையில் இரும்பு, கால்சியம் சத்து உள்ளது.
கறிவேப்பிலை ஈர்க்கை பயன்படுத்தி ரசம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை ஈர்க்கு, தக்காளி சாறு, கொத்துமல்லி இலைகள், மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், மஞ்சள் பொடி, கடுகு, நல்லெண்ணெய், புளிகரைசல், உப்பு. பாத்திரத்தில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன், பெருங்காயப் பொடி, கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மிளகு, சீரகம், பூண்டு சேர்ந்த கலவையை சேர்க்கவும். ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்க்கவும்.
கறிவேப்பிலை ஈர்க்குகளை சிறிய துண்டுகளாக நசுக்கி எடுத்து சேர்க்கவும். இது வதங்கியவுடன் தக்காளி சாறு, புளி கரைசல், தேவையான அளவு உப்பு, நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதில் கொத்துமல்லி இலைகளை சேர்க்கவும். இந்த ரசத்தை குடித்துவர வாந்தி, குமட்டல், தலைசுற்றல் சரியாகும். சளி, இருமல் இல்லாமல் போகிறது. செரிமானத்தை தூண்டக்கூடியதாகிறது. உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கிறது.
அன்னாசி பழத்தை பயன்படுத்தி நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்தும் ரசம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பழம், தக்காளி, மஞ்சள் பொடி, கடுகு, நல்லெண்ணெய், பெருங்காயப்பொடி, பூண்டு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, மிளகு, சீரகம், உப்பு. நல்லெண்ணெய், கடுகு, பெருங்காயப்பொடி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய அன்னாசி பழம், தக்காளி துண்டுகள் சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி சேர்க்கவும்.
இதனுடன் மிளகு, சீரகம், பூண்டு கலவையை சேர்க்கவும். பின்னர், அன்னாசி பழச்சாறு, தக்காளி சாறு, தேவையான உப்பு, கொத்துமல்லி இலை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இந்த அன்னாசி ரசத்தை குடித்துவர வயிற்று பூச்சிகள் வெளியேறும். சளித்தொல்லை இருக்காது. செரிமானத்தை சீர்செய்யும். வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள அன்னாச்சி பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
Source : Dinakaran
No comments:
Post a Comment