Wednesday, January 27, 2016

இயற்கை உணவில் வளரும் பிராய்லர் கோழி



கீரை, காய்கறி, மஞ்சள் பொடி கலந்த குடிநீர், பால் என பிராய்லர் கோழி பண்ணையில் கோழிகளுக்கு சத்துமிக்க இயற்கை உணவுகளை மட்டுமே கொடுத்து வளர்க்கிறார் மாற்றுத்திறனாளியான கோபி. மதுரை அழகர்கோவில் அருகே தொண்டமான்பட்டியை சேர்ந்த இவர், டிப்ளமா படித்துள்ளார். துவக்கத்தில் "டிவி' "ரேடியோ' பழுது நீக்கி வந்தார். அதில் போதிய வருமானம் இல்லை.
தந்தை செல்லத்திற்கு சொந்தமான 10 ஏக்கரில் தென்னை, மா, கொய்யா, வாழை விவசாயத்தில் எட்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். நல்ல வருவாய் கிடைத்தது. தோட்டத்தின் ஒரு பகுதியில் தனியார் பிராய்லர் கோழி நிறுவனத்திற்காக கோழிப்பண்ணை அமைத்தார். இவரது பண்ணையில் தலா இரண்டு முதல் இரண்டே கால் கிலோ எடையுடன் ஆரோக்கியமாக வளர்க்கப்பட்ட கோழிகள் 45 நாட்களுக்கு ஒரு முறை 8,000 எண்ணிக்கையில் உற்பத்தி செய்கிறார்.
கோபி கூறியதாவது: தனியார் பிராய்லர் கோழி நிறுவனம் தடுப்பூசி போடப்பட்ட குஞ்சுகள், தீவனத்தை தருகிறது. 45 நாட்களுக்கு பின் கோழிகளை எடுத்து செல்கின்றனர். கால்நடை மருத்துவர் ஒருவர் தினமும் பண்ணைக்கு வந்து கோழிகளை பார்வையிடுகிறார்.
கோழியில் பூச்சி, பேன் தாக்காமல் இருக்க மஞ்சள், பெருங்காயம், பூண்டு கலவையை மிக்ஸியில் அரைத்து தண்ணீர் கலவையில் கோழிகளுக்கு தெளித்து விடுவதால் பூச்சி தாக்குதல் இருக்காது. நுண்ணூட்ட சத்துக்காக முருங்கை கீரை, அருகம்புல், காய்கறிகளை, மக்காச்சோளத்துடன் கலந்து தீவனமாக தருகிறோம். குடிநீரில் பால் கலந்து கொடுப்பதால் கோழிகள் கால்சியம் சத்து மிகுதியுடன் வளரும். விவசாயத்துடன் இணைத்தொழிலாக பிராய்லர் கோழி வளர்க்கிறேன். இதன் மூலம் மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கிடைக்கிறது. அடுத்ததாக நாட்டுக்கோழி பண்ணை அமைக்க உள்ளேன் என்றார்.
இயற்கை உணவு தொழில்நுட்பம் குறித்து 90476 57111 ல் கேட்கலாம்.
- கா.சுப்பிரமணியன், மதுரை.

Source : Dinamalar

No comments:

Post a Comment