Thursday, January 28, 2016

கரும்புத் தோகையைப் பொடியாக்கும் இயந்திரம் வாங்க அரசு மானியம்


கரும்புத் தோகையைப் பொடியாக்கும் இயந்திரம் வாங்க சுய உதவிக் குழுக்களுக்கு மானியம் வழங்கப்படும் என வேளாண்துறை இணை இயக்குநர் ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 மாவட்டத்தில் நல்லூர், மங்களூர் வட்டாரங்களில் கரும்பு சாகுபடி பரப்பு அதிகளவில் உள்ளது. கரும்புத் தோகையை தீ வைத்து எரிப்பதால், மண்ணில் வெப்பநிலை அதிகரித்து நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அழிவதோடு சுற்றுச்சூழலும் மாசடைகிறது. மேலும், மதிப்பு மிக்க இயற்கை எரு கிடைக்காமல் போகின்றது. இதனைத் தவிர்க்க கரும்புப் தோகையைப் பொடியாக்கி மக்க வைத்து எருவாக்கிப் பயன்படுத்தலாம்.
 இதற்காக, மாவட்டத்தில் மாநில திட்டக் குழுவின் மூலம் செயல்படுத்தப்படும் சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ், பின்தங்கிய வட்டாரங்களான நல்லூர் மற்றும் மங்களூரில் நடப்பு 2015-16ஆம்  ஆண்டில் கரும்புத் தோகையைப் பொடியாக்கும் இயந்திரம் மானிய விலையில் (அதிகபட்சம் ரூ.80,000 வரை) சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
 எனவே, இப்பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள், மேற்குறிப்பிட்ட இயந்திரத்தை மானிய விலையில் பெற வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி, குழு அமைத்துப் பயன்பெறலாம் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment