செப்பு நெருஞ்சில் புல் தரையில் வளரக்கூடியது. தரையோடு தரையாக படர்ந்துள்ள கொடி வகை. செப்பு நெருஞ்சில் இருமல், காய்ச்சலை போக்கும் தன்மை கொண்டது. இதன் பூக்கள் ரோஜா வண்ணத்தில் அமைந்திருக்கும். செடிப்பகுதி படர்ந்து காணப்படும். நெருஞ்சில் இனத்தை சார்ந்தது. இலைப் பகுதி காய்ச்சலை தணிக்கும் மருந்தாகிறது. வேரானது புழு கொல்லியாகிறது. முழுச்செடியும் பயனுள்ளதாகிறது. சிறுநீரக கற்கள், பித்தப்பதை கற்களை வெளித்தள்ளும் தன்மை கொண்டது.
சிறுநீரை பெருக்க கூடியது. பால்வினை நோய்க்கு மருந்தாகிறது. வெள்ளைப்போக்கை இல்லாமல் செய்கிறது. செப்பு நெருஞ்சில் செடியை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். செப்பு நெருஞ்சிலின் இலை, கொடி என அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன், அரை ஸ்பூன் அளவுக்கு பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி 50 முதல் 100 மில்லி வரை காலை, மாலை வேளையில் குடிப்பதால் காய்ச்சல் தணியும். வியர்வை பெருகும்.
உடல் உஷ்ணத்தை போக்கும்.பித்தப்பை கற்கள், சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செப்பு நெருஞ்சில் செடி, வெட்டி வேர், பனங்கற்கண்டு. வெட்டி வேரை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இதனுடன், செப்பு நெருஞ்சில் செடி, அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்கவும். நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால், சிறுநீரக கற்கள் கரையும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும்.
புல்வெளி, விளையாட்டு மைதானத்தில் படர்ந்திருக்கும் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அல்சரை சரிப்படுத்த கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. புத்துணர்வை தரக்கூடியது. நோய் நீக்கியாக பயன்படுகிறது. வேரை பயன்படுத்தி வயிற்று பூச்சி, புழுவை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செப்பு நெருஞ்சில் வேர், கருஞ்சீரகம், தேன். 10 கிராம் வேருடன் சிறிது கருஞ்சீரகம் சேர்க்கவும்.
ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்கவைக்க வேண்டும். வடிக்கட்டி ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் சேர்த்து குடிக்கவும். 50 முதல் 100 மில்லி வரை வாரம் ஒருமுறை என 3 வாரம் எடுத்துக் கொள்ளலாம். இதனால் வயிற்றில் இருக்கும் நாடா, கொக்கி, கீரி புளுக்கள் வெளியேறும். மலம் இளக்கியாகவும் பயன்படுகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட செப்பு நெருஞ்சில், சிறுநீரக பாதையில் இருக்கும் தொற்றுக்களை போக்கும்.
சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. செப்பு நெருஞ்சில் செடியை நிலத்தில் இருந்து எடுக்கும்போது குடை வடிவில் இருக்கும். வேர் பகுதி நீண்டிருக்கும். இலைகள் கீழா நெல்லி இலைகள் போன்று இருக்கும். இலை சிறியதாகவும் அடர்த்தியாகவும் காணப்படும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அதிகம் கிடைக்கும். இதை சேகரித்து காயவைத்து பயன்படுத்தலாம். செப்பு நெருஞ்சில் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
Source : Dinakaran
No comments:
Post a Comment