Sunday, January 31, 2016

சீசன் தொடங்க உள்ளதையொட்டி கொடைக்கானலில் பூச்செடிகள் நடவு பணிகள் தீவிரம்


 : 
கொடைக்கானல்,
சீசன் தொடங்க உள்ளதையொட்டி கொடைக்கானலில் பூச்செடிகள் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பூச்செடிகள் நடவுப்பணிதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குளு, குளு சீசன் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் 2–வது வாரம் வரை இருக்கும். அப்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவற்றில் லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக்குலுங்கும். இதற்கான செடிகள் அனைத்தும் தோட்டக்கலைத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சீசன் தொடங்குவதற்கு முன்பே நடவு செய்யப்படுகின்றன. அதன்படி இந்த ஆண்டிற்கான பூச்செடிகள் நடவுப்பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
பல வண்ணப்பூக்கள்
இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘சீசன் தொடங்குவதையொட்டி பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவற்றில் உயர்ரக பூச்செடிகளான டேரியா, ஆக்டர்டெலிபீனியம், சப்னேரியன், சுவிட்வில்லியம், ஆர்ணமண்டல் கேபேஜ், கோரியாப்சிஸ் போன்ற செடிகள் லட்சக்கணக்கில் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த செடிகளில் இருந்து பல வண்ணங்களில் கண்ணை கவரும் வகையில் பூக்கள் பூக்கும்.
மேலும் 2 பூங்காக்களிலும் செடிகளை நடவு செய்யும் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளன. கொடைக்கானலில் மே மாதத்தில் தான் பூக்கள் பூப்பதற்கான கால நிலை உருவாகும். எனவே அந்த கால கட்டத்தில் பூக்கும் செடிகளாகவே நடவு செய்யப்பட்டுள்ளன. இதனை காண வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக உறவினர்களுடன் சுற்றுலா தலங்களை பார்வையிடுவார்கள்’ என்றனர்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment