Wednesday, January 27, 2016

மாடியில் தோட்டம் அமைக்க... குறைந்த விலையில் விதை, உரங்கள் விநியோகம்

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் பொருள்காட்சியில் இடம் பெற்றுள்ள மாடித் தோட்ட காய்கறிச் செடிகளை ஆர்வத்துடன் பார்வையிடுவோர். 
மாடித் தோட்டம் அமைப்பதற்கான விதை ரகங்கள், செடிகள், இடுபொருள்கள் ஆகியவை குறைந்த விலையில் விநியோகிக்கப்படுகிறது.
 மக்கள் தொகை அதிகரிப்பு, விளைநிலை நிலங்கள் குறைதல், காய்கறி விலை உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்களே பங்கேற்கச் செய்யும் வகையில் மாடித் தோட்டம் அமைக்க "நீங்களே செய்து பாருங்கள்' என்ற மாநகர அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த ரூ.2.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
 இதில் முதல் கட்டமாக சென்னை, கோவை மாநகரப் பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொருவரும் மாடித் தோட்டம் அமைத்து   விஷத்தன்மை இல்லாத காய்கறிகளை விளைவித்து பயனடைந்தனர்.
2 மாநகரங்களில் விரிவாக்கம்: நிகழாண்டில் மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரப் பகுதிகளிலும் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்து, 1 லட்சம் பேருக்கு மாடித் தோட்டம் அமைப்பதற்கான விதைகள், உரங்கள் ஆகியவை விநியோகிக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் தோட்டக் கலைத் துறையினர் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவுத்திடலில் அரங்கு: சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத் துறை நடத்தும் பொருள்காட்சியில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் சாதனை திட்டங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்குகள் உள்ளன.
அதில், தோட்டக்கலைத்துறை சார்பில் உள்ள அரங்கில் குறைந்த விலையில் காய்கறிகள் விதை, இடுபொருள்கள் வழங்கப்படுகிறது.
 இதுதொடர்பாக திருவேற்காடைச் சேர்ந்த வசந்தகுமார் கூறுகையில்,  முற்றிலும் இயற்கை உரங்களைக் கொண்டு உற்பத்தி செய்வதால் 40 நாள்களிலேயே நஞ்சற்ற காய்கறிகள் கிடைக்கும். அதனால், குறைந்த விலை காய்கறி விதைகளுடன் கூடிய பொட்டலத்தைச் வாங்குகிறேன் என்றார்.
 இதுகுறித்து தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், மாடித்தோட்டம் அமைப்பதற்கான 6 வகையான விதைகள், இயற்கை உரங்கள், புற ஊதக் கதிர்களை தாங்கி செடியை வளர்க்க கூடிய பைகள் உள்ளிட்டவைகளுடன் குறைந்த விலையில் ரூ.500-க்கு வழங்கப்படுகிறது.
 ஏற்கெனவே, அண்மையில் சென்னையில் 100 இடங்களில் முகாம்  நடத்தப்பட்டது. அதில், 10 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர். இதன் மூலம் காய்கறிகளை நேரடியாக விளைவித்து சத்தான காய்கறிகளை சத்தான காய்கறிகளைச் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியும்.
 பொருள்காட்சியில் மாடித்தோட்டத்தில் இடம் பெறும் காய்கறிச் செடிகள் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதோடு விளைவிப்பதற்கான வழிகாட்டு கையேடும் வழங்கப்படுகிறது.
பதிவு வசதியும் உண்டு: தீவுத்திடலில் உள்ள விதை விற்பனை மையத்தை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டுச் செல்கின்றனர். குறைந்த விலை விதைகளில் சில, கையிருப்பு இல்லாத நிலையில் அவற்றை மீண்டும் வந்து பெற்றுச் செல்லும் வகையில் விதைகளின் பெயர்களைப் பதிவு செய்கிறோம் என்றனர்.
Source : Dinamani


No comments:

Post a Comment