Sunday, January 24, 2016

வீடுகளில் தோட்டம் அமைப்போம்... மன மகிழ்ச்சி பெறுவோம்


காடு, மரங்களை அழித்தால் நாடு அழியும் என்பது பழமொழி. கால நிலையை சீராக வைப்பதற்கும், மழை பொழியவும், வெப்பத்தை குறைக்கவும் மரங்கள் பயன்படுகின்றன. இதை உணராமல் மனிதர்கள் மரங்களை அழித்து வருகின்றனர். மரங்கள் அழிவதில் இருந்து தவிர்க்க வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என சிந்தனையாளர்கள் கூறுகின்றனர்.
இதையே தனது கொள்கையாகவே கடைபிடித்து வருகிறார் திருத்தங்கல் கருப்பசாமி. தனது வேலையுடன் இயற்கை வளங்களை காக்கும் வீதம் வீட்டு தோட்டம் அமைத்து வெற்றி கண்டுள்ளார். குடும்பத்தோடு விவசாய பணிகள் செய்வதால் மனதிற்கு மகிழ்ச்சி தருவதாக கூறும் அவர், செழிப்பான பப்பாளி, மாதுளை, தென்னை, வாழை, வெண்டை, தக்காளி, பூசணி உள்ளிட்ட காய்கறி வகைகளை விளைவித்து வருகிறார்.
கருப்பசாமி கூறுகையில், "" "டிவி'யில் இயற்கை வளங்களை தத்ரூபமாக காண்பிக்கும் சேனலை விடாமல் பார்ப்பேன். அதில் ஒன்றாக உள்ள "டிஸ்கவரி' சேனலில் உலகில் அரிய வகை பல மரங்கள் அழிந்து வருவதாக தெரிவித்தனர். நிலைமை இப்படியே சென்றால் வீட்டில் அருகே நிற்கும் மரம் கூட அழிந்து விடும். இதை மாற்றவே வீட்டு தோட்டம் அமைத்தேன். எனது மனைவி உமாமகேஷ்வரி உதவியாக உள்ளார். காலையில் எழுந்ததுடன் தோட்டத்திற்கு தண்ணீர் விடுவது, களைபிடுங்குவது போன்ற வேலைகள் செய்வேன். இதற்காக 2 மணி நேரம் ஒதுக்குவேன். அதன் பின் வேலைக்கு செல்வேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை தன் தோட்டத்தில் விளைந்து விடுவதால் காய்கறி சந்தைக்கு செல்லவேண்டிய அவசியமில்லாமல் போனது,'' என்றார்.

சக்கைப்போடு போடும் சவுக்கு சாகுபடி
குணசேகரன்(திருத்தங்கல்): மரம் வளர்ப்பு என்றால் அதன் பலனை அனுபவிக்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற சிந்தனை பலருக்கு உண்டு. சவுக்கு மரம் 5 ஆண்டில் அறுவடை செய்யலாம். வணிக ரீதியான பயன்பாட்டுக்கு சவுக்கு நல்ல பலன் தரும். கட்டட வேலை, காகித கூழ் தயாரிப்பு இம் மரம் அதிக பயன்படுகிறது. ஏக்கருக்கு 50டன் கிடைக்கும். இதில் 30டன் உருட்டு கட்டையாகவும், 20 டன் விறகாகவும் கிடைக்கும். ஒருடன் உருட்டு கட்டை ரூ.2800. விறகு ஒருடன் ரூ.2200 வரை விலைபோகிறது. இதுபோன்ற பலன்களால் திருத்தங்கல், சிவகாசி பகுதியில் பலரும் சவுக்கு சாகுபடிக்கு மாறி வருகின்றனர். சவுக்கு சாகுபடி சக்கைப்போடு போடும்.

மூங்கில் வளர்ப்போம் ஆக்சிஜன் பெறுவோம்
மைக்கல்(திருத்தங்கல்): மூங்கில் மரம் ஒருமுறை நட்டால் மூன்று தலைமுறைக்கு வருமானம் தரும் பச்சை தங்கம் என அழைக்கப்படும் மரம். அதிகளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்து சுத்தமான காற்றை சுவாசிக்க தருகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 800 கிராம் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மூங்கில் மரம் நாள் ஒன்றுக்கு 850 கிராம் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. அதனால் கார்பன் வணிகத்தில் மூங்கில் முக்கிய இடம் பிடிக்கிறது. எனவே சுத்தமான ஆக்சிஜன் வேண்டுவோர் வீட்டுக்கு ஒரு மூங்கில் மரம் வளர்த்து பயனை அனுபவியுங்கள்.

Source : Dinamalar

No comments:

Post a Comment