கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் புற்கள் செழித்து வளர்ந்துள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து மேய்சலுக்காக கால்நடைகள் வருவது அதிகரித்துள்ளது. இவற்றைப் பயன்படுத்தி விவசாய நிலங்களில் கிடை கட்டுவதன் மூலம் இயற்கை உரம் சேகரிப்பில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக, பருவமழை அளவு குறைந்து கடும் வறட்சி ஏற்பட்டது. அணை, ஏரி, குளங்கள் நிரம்பாததால் நீர்வளம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. மழை காலத்தில் கூட ஏரி, குளங்கள் கோடையை போல் வறண்டு பரிதாபமாக காட்சியளித்தது.
இதனால் கால்நடை வைத்திருப்பவர்கள், அவற்றை பராமரிக்க முடியாமல் தவித்தனர். நெல் சாகுபடி பரப்பு குறைந்ததால், மாடுகளின் முக்கிய தீவனமாகன வைக்கோல் தட்டுபாடு காரணமாக, அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதேபோல் மேச்சல் நிலங்கள் அனைத்தும் மழையின்றி கருகி, கட்டாந்தரைபோல் மாறியதால் கால்நடைகள் உணவு கிடைக்காமல் திண்டாடின. மிகக் குறைந்த விலைக்கு கால்நடைகளை விற்க வேண்டிய பரிதாப நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை ஓட்டி வருவது குறைந்தது. வறட்சியால் கால்நடை வளர்ப்பு கடும் சவாலாக மாறியது. பால் உற்பத்தி செய்யும் நோக்கில் உள்ளவர்கள் மட்டும் கடும் சிரமங்களுக்கிடையே பசுக்களை பராமரித்தனர்.
இந்நிலையில் இந்தாண்டு வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து நீர்நிலைகள் அனைத்தும் முழுவதும் நிரம்பியது. கரம்பாக கிடந்த வயல்களில் நெல் நடவுப் பணிகள் துவங்கியதால் விவசாயம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. தரிசு நிலங்களில் புற்கள் செழித்து வளர்ந்துள்ளதால் கால்நடைகளுக்கு போதிய மேய்ச்சல் பகுதி கிடைத்துள்ளது.
இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து மந்தை மந்தையாக ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்காக ஓட்டி வருவது அதிகரித்துள்ளது. கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் சாகுபடி செய்வதற்கு ஏற்ற சூழல் திரும்பியுள்ளது. வயல்களில் இயற்கை உரம் இடும் நோக்கில் "கிடை' கட்டுவதில் விவசாயிள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேய்ச்சல் முடிந்து மாலை நேரத்தில் நடவு செய்யாத நிலங்களில் ஆடுகளை கும்பலாக ஓய்வெடுக்க வைப்பதை "கிடை' கட்டுதல் என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு கிடை கட்டவதால், ஆடுகள் போடும் சாணம், சிறுநீர் ஆகியவை பயிர்களுக்கு நல்ல இயற்கை உரம் என்பதால் விவசாயிகள் பலரும் தங்கள் நிலங்களில் கிடை கட்ட ஆர்வம்காட்டி வருகின்றனர்.
இதற்கு குறிப்பிட்ட தொகையை மந்தை வைத்திருப்பவர்கள், நிலத்தின் உரிமையாளரிடம் பெற்றுக்கொள்கின்றனர். ஒரு ஏக்கரில் 2,500 ஆடுகள் வரை "கிடை' கட்டுகின்றனர். இதற்காக ஒரு இரவுக்கு 1,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இதன் மூலம் ஆட்டு மந்தை வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
தற்போது பல ஆயிரக்கணக்கில் ஆடு, மாடுகள் மேயச்சலுக்காக கள்ளக்குறிச்சி சுற்றியுள்ள சங்கராபுரம், ரிஷிவந்தியம், தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம் ஆகிய பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது. மொத்தத்தில் இந்தாண்டு பெய்துள்ள மழையால் கால்நாடை வளர்ப்போரும், பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment