பரங்கி பூசணி, பரங்கிக்காய், சர்க்கரை பூசணி என்று பல்வேறு பெயர்களில் இதை தமிழிலே குறிப்பிடுவார்கள். தரையில் படரும் கொடி வகையைச் சேர்ந்த இந்த காய் மேற்புறத்தில் அடர்த்தியான பச்சை நிற தோலையும், உள்புறத்தில் அதிக சதைப்பற்றையும், நிறைய விதைகளையும் கொண்டதாக விளங்குகிறது. இதன் தோல், சதைப்பகுதி, விதைகள் ஆகியவையும் மருந்தாக விளங்குகின்றன. மேலும் இதன் இலைகளும் நல்ல ஊட்டசத்து மிக்க உணவாக பயன் தரக் கூடியதாகும்.
சீனா போன்ற நாடுகளில் பூசணிக்காயை சூப் ஆக வைத்து உணவுக்கு முன்பாக பருகும் வழக்கம் உள்ளது. இதில் வைட்டமின் ஏ மற்றும் ஈ அதிகமாக உள்ளது. 100 கிராம் இலையில் 34 மிலி கிராம் அளவுக்கு கால்சியம், 39 மிலி கிராம் மெக்னீசியம், 4மிலி கிராம் இரும்பு சத்து நிறைந்து காணப்படுகிறது. இவ்வாறு உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாது உப்புகள், மினரல்கள் நிறைந்து காணப்படுவதால் பூசணிக்காய் உடலுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது.
பரங்கிக்காயின் சதைப்பகுதியை பயன்படுத்தி உடலுக்கு தேவையான மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் பரங்கிக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சதைப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பனங்கற்கண்டு, சீரகம், நெய். வேக வைத்த பரங்கிகாய் சதைப்பகுதியை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் அளவுக்கு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும்.
அரை ஸ்பூன் அளவு சீரகம் சேர்க்க வேண்டும். சிறிதளவு நெய் சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு டம்ளர் அளவு நீர் விட்டு தேநீர் தயார் செய்து கொள்ள வேண்டும். இதை நன்றாக கொதிக்க செய்து வடிகட்டி பயன்படுத்த வேண்டும். இந்த தேநீர் வெயில் காலத்தில் உடலில் ஏற்படக் கூடிய வெப்பத்தை தணிக்கக் கூடிய ஒன்றாகும். அதே போல அதிகளவு மருந்துகளை உட்கொள்வதால் வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடியதாகவும் பூசணி தேநீர் பயன் தருகிறது.
வெயில் கால அழற்சி என்று சொல்லப்படும் உடல் நோயை குணப்படுத்தும் தன்மை உடையதாக இந்த பூசணி பயன் தருகிறது. பொதுவாக கோடை காலத்தில் வெப்பத்தால் ஏற்படும் எரிச்சல், சிறுநீரக கோளாறு, வயிற்று கோளாறு, வயிற்று வலி ஆகியவற்றை போக்கும் மருந்தாக பூசணியின் சதைப்பகுதி வேலை செய்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருவதாக, உடலில் இருக்கும் நுண் கிருமிகளை தடுக்கக் கூடியதாக இது விளங்குகிறது.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை போக்கு என்ற பிரச்னையை ஏற்படுத்தும் கிருமிகளை இது தடுக்கிறது. பூசணியை பயன்படுத்தி புண்களை ஆற்றக் கூடிய மருந்தை தயார் செய்யலாம். பரங்கிக்காயின் தோல் மற்றும் சதைப்பகுதியை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். இந்த பசையை ஒரு அரைஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு தேன் சேர்க்க வேண்டும். இந்த பசையை சிராய்ப்பு, காயங்கள், புண்கள் ஆகியவற்றிற்கு மேல் பூச்சு மருந்தாக பயன்படுத்தலாம். இவ்வாறு பூசணிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருப்பதால் இதை பயன்படுத்தி உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பெறலாம்
Source : Dinakaran
No comments:
Post a Comment