Friday, August 14, 2015

பழங்கள், காய்கறிகளில் மதிப்புக் கூட்டுதல், தொழில்நுட்பப் பயிற்சி


தருமபுரியில் அம்மா பண்ணை மகளிர் குழுக்கள், விவசாயிகளுக்கு பழங்கள், காய்கறிகளில் மதிப்பு கூட்டுதல் குறித்த தொழில் நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் நல்லனஅள்ளி, வெள்ளாளப்பட்டி, சோலைக் கொட்டாய், ஏலகிரியான் கொட்டாய், மேல்பூரிக்கல் கிராமங்களில் உள்ள அம்மா பண்ணை மகளிர் குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள் தத்தெடுப்புக் கிராமங்களான பழைய தருமபுரி, கோணங்கி நாயக்கனஅள்ளி, பாலவாடியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் தலைமை வகித்தார். வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநர் காளியப்பன், நல்லம்பள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) வ.அமுதவள்ளி பயிற்சியைத் துவக்கி வைத்தார்.
பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் முறைகள், தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் ஜோதிலட்சுமி பயிற்சியளித்தார்.
வேளாண் விளை பொருள்கள் தரம் பிரித்தல், அறுவடைக்குப் பின் சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து விற்பனை செய்யும் முறைகள் குறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண் அலுவலர் சுப்பிரமணியன் எடுத்துரைத்தார்.

Source : Dinamani

No comments:

Post a Comment