Monday, August 17, 2015

வேளாண் உற்பத்தியை பெருக்குவது அவசியம்: ஆட்சியர்


வேளாண் உற்பத்தியை பெருக்குவது அவசியம்: ஆட்சியர்:

நவீன தொழில்நுட்ப வசதிகளின் மூலம் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி, திண்டுக்கல் மாவட்டத்தின் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
வேளாண் பொறியியல் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் திட்டங்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனூத்து ஊராட்சியில் நுண்ணீர் பாசனத்துடன் கூடிய சோலார் பம்புசெட்டு திட்டத்தை ஆய்வு செய்த பின், அவர் தெரிவித்தது: வேளாண்மைத் துறையில் நுண்ணீர் பாசனத்துடன் சூரிய ஒளிக்கேற்ப நகரக்கூடிய சோலார் தகடுகள் கொண்ட சோலார் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
80 சதவீத மானியத்துடன் கூடிய இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 60 விவசாயிகளுக்கு ரூ. 2.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி, வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானிய விலையில் பண்ணைக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 40 முதல் 50 சதவீத மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர், களையெடுக்கும் கருவி, ரோட்டவேட்டர், தெளிப்பான், குழி எடுக்கும் கருவி மற்றும் தட்டை வெட்டும் கருவி வழங்கப்படுகின்றன. கடந்த 2014-15 ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 91 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவது அவசியம். அதற்காக நில மேம்பாட்டுத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நுண்ணீர் பாசனத்துடன் கூடிய சோலார் பம்பு செட்டுகளை பயன்படுத்தி, விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்க விவசாயிகள் முன்வர வேண்டும் என்றார் அவர்.
ஆய்வின்போது, வேளாண் செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவிச் செயற்பொறியாளர் பரந்தாமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ. சாலிதளபதி ஆகியோர் உடனிருந்தனர்.

Source:dinamani

No comments:

Post a Comment