கோபி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விதை நெல், உரம் விற்பனை:
முதல்போக சாகுபடி விவசாயிகளுக்காக, கோபி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 143 டன் விதை நெல், 86 டன் உரம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கோபி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம், தரமான விதை நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி மற்றும் மேட்டூர் பாசன பகுதிகளில், கோபி கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம், தாய் விதை நெல் தரப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் வயலில், இதனை பயிரிட்டு வேளாண் துறையின்
பரிந்துரைக்கேற்ப, அதை விதை நெல்லாக மீண்டும் உற்பத்தி செய்கின்றனர். இவ்வாறு உற்பத்தியாகும் விதை நெல், மீண்டும் சங்கத்துக்கே வழங்கப்படுகிறது. இந்த விதை நெல் அதிக முளைப்பு திறன் கொண்ட விதை நெல்லாக நேர்த்தி செய்யப்படுகிறது.
பின்னர் இவை, காவிரி டெல்டா பகுதிகள், கீழ்பவானி, அமராவதி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளின் தேவைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே, கடைக்கோடி விவசாயிகள் பாசன வசதி பெற, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலில், ரூ. 40.45 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணி முடிந்து, கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல் போக பாசனத்துக்கு 135 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது, இரு பாசன சபையிலும், விவசாயிகள் நாற்றாங்கல் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல்போக விவசாயிகளுக்காக, கூட்டுறவு சங்கத்தில் 143 டன் விதை நெல், 86 டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
Source:dinamani
No comments:
Post a Comment