வேளாண்மை பொறியியல் துறை மூலமாக விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுவதாக ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட செய்தித் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் வேளாண்மை இயந்திரமயமாக்கலுக்கான சார் இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் நடவு இயந்திரம், பல்வகை தானியங்கள் கதிரடிக்கும் கருவி, நேரடி விதைப்புக் கருவி, மணிலா காய் பிரித்தெடுக்கும் கருவி போன்றவை மானியத்தில் வழங்கப்படுகின்றன.
இதனைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் பெண் விவசாயிகள் மற்றும் பொதுப் பிரிவினரிடமிருந்து வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள கடலூர் மாவட்ட விவசாயிகள், தங்களின் வட்டத்துக்குள்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டம் பகுதி விவசாயிகள் கடலூர் - பாண்டி சாலை சின்னகங்கணாங்குப்பத்திலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையும், சிதம்பரம்
மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்ட விவசாயிகள் சிதம்பரம், பள்ளிப்படையிலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ)
அலுவலகத்தையும் தொடர்புகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment