பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளுக்குள்பட்ட ஒவ்வொரு வீதியிலும் 2 மாதிரி மாடித் தோட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதுமுள்ள 528 பேரூராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்குவதற்காக, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளிலும் பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என வர்த்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 23 பேரூராட்சிகளிலும் 1.05 லட்சம் வீடுகள் உள்ளன. வீடுகளில் சேரிக்கப்படும் குப்பைகளைச் செடிகளுக்கு உரமாக்கும் வகையில் மாடித் தோட்டம் அமைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்தது: பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழும் வகையில், முதல்கட்டமாக 23 பேரூராட்சி அலுவலகத்திலும் மாடித் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, 23 பேரூராட்சிகளில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் தலா 2 வீடுகளில் மாடித் தோட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் ஒழிப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, தனியார் பங்களிப்புடன் துணிப் பைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை, 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணிப் பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஒவ்வொரு வீட்டிலும் மக்கும் குப்பைகளை சேகரித்து, இயற்கை உரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் விரைவுப்படுத்தப்படும் என்றார் அவர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யும் மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலும், பொருள்களை வழங்க பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தும் வர்த்தர்களுக்கு ரூ.1000 வரையிலும் அபராதம் வசூலிக்கப்படும். இந்த நடைமுறை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றார் உதவி இயக்குநர் ராஜேந்திரன்.
Source : Dinamani
No comments:
Post a Comment