ஒரே பயிர்களை மீண்டும் மீண்டும் பயிர் செய்வதால், பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து குறைந்து, பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறைவாகக் கிடைக்கிறது.
இதைத் தவிர்க்க குறுகியகால மாற்று வழிப் பயிர்களை சாகுபடி செய்து வருவதன் மூலம் மண்ணின் சத்துகள் பாதுகாக்கப்பட்டு நல்ல பலனை ஈட்ட முடியும்.
இதனால், பாரம்பரியப் பயிர்களான நெல், கேழ்வரகு, கரும்பு, மரவல்லி ஆகியவற்றை அவ்வப்போது தவிர்த்து குறுகிய காலத்தில், குறைந்த தண்ணீர், குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட பயிர்களான காய்கறிகள், கீரை வகைகள், பூ வகைகளை சாகுபடி செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூண்டி, ஊத்துக்கோட்டை, எல்லாபுரம் ஆகிய ஒன்றியங்களுக்கு உள்பட்ட ஊத்துக்கோட்டை, பூண்டி, பிளேஸ்பாளையம், நம்பாக்கம், மோவூர், தாராட்சி, பெரம்பூர், பெரியபாளையம், வெங்கல், தாமரைக்குப்பம், குருவாயல், புன்னப்பாக்கம், கன்னிகைபேர், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாமந்திப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடவு செய்த இரண்டு மாதங்களில் பூப்பூக்கத் தொடங்கி பலன் கிடைக்கிறது. ஒரு ஏக்கரில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 கிலோ சாமந்திப்பூ வரை அறுவடை செய்து கோயம்பேடு சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
பூ வரத்து, விசேஷ தினங்கள் ஆகியவற்றைப் பொருத்து விலை நிர்ணயம் செய்யப்படும். சீசன் நேரங்களில் ஒரு கிலோ பூ ரூ.30 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. அப்போது, கணிசமான வருவாய் ஈட்டி வரும் விவசாயிகளுக்கு, சீசன் இல்லாதபோது வருவாய் குறையும்.
ஆனால், தற்போது சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆடித் திருவிழா நடைபெற்று வருவதால் ஒரு கிலோ பூ ரூ.25 முதல் ரூ.40 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்து கவலையில் இருந்த விவசாயிகள், தற்போது நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment