Monday, March 14, 2016

ஏப்ரல், மே மாதங்களில் கேரட், பீட்ரூட் விலை நிலையாக இருக்கும்

ஏப்ரல், மே மாதங்களில் கேரட், பீட்ரூட் விலை நிலையாக இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கும் வேளாண்மை விற்பனை தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின் பின்புல அலுவலகம் கேரட், பீட்ரூட் விலை பற்றி ஆய்வு செய்தது. 

இதில், கடந்த பத்து ஆண்டுகளில் மேட்டுப்பாளையம் மொத்த சந்தையில் நிலவிய விலை தொடர்பாக ஆய்வு செய்தது. அதன்படி, வரும் ஏப்ரல், மே மாதங்களில் கேரட்டின் மொத்த சந்தை விலை கிலோவிற்கு ரூ28 முதல் ரூ30 வரை நீலகிரி கேரட்டிற்கும், சமவெளியில் பயிரிடப்படும் கேரட்டிற்கு கிலோவிற்கு ரூ24 முதல் ரூ26 வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 
இதே போல், பீட்ரூட் விலை மேட்டுப்பாளையம் மொத்த சந்தையில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி மாவட்ட பீட்ரூட் கிலோவிற்கு ரூ13 முதல் ரூ15 வரையிலும், சமவெளி பீட்ரூட் கிலோவிற்கு ரூ10 முதல் ரூ12 வரையிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு வேளாண் பல்கலை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Source : Dinakaran

No comments:

Post a Comment