கொழுப்பு சத்தை குறைக்க கூடியதும், மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டதும், ஞாபக சக்தியை அதிகரிக்கவல்லதும், கண்களை பாதிக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியதும், நச்சுக்களை வெளியேற்ற கூடியதுமான, அத்தியாவசியமான உணவுப்பொருளாக விளங்கி வரும் சோம்பு சுவையும் மணமும் கொடுக்க கூடியது. இதற்கு பெருஞ்சீரகம் என்ற பெயரும் உண்டு. பல்வேறு நன்மைகளை கொண்ட சோம்பு, இதய நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று கோளாறுகளை சரிசெய்கிறது. கண்களுக்கு பலத்தை தருகிறது. தோலுக்கு நிறத்தை கொடுக்கிறது.
சோம்புவை பயன்படுத்தி ரத்த அழுத்தம், கொழுப்பு சத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோம்பு பொடி, மஞ்சள் பொடி, தேன். அரை ஸ்பூன் சோம்பு பொடி, கால் ஸ்பூன் மஞ்சள் பொடியுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர கொழுப்புச் சத்து, ரத்த அழுத்தம் குறையும். மலச்சிக்கலை போக்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.சோம்புவை கொண்டு கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம், அரை ஸ்பூன் சோம்பு பொடி எடுத்துக் கொள்ளவும்.
இதில் ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தூங்க போகும் முன்பு குடித்துவர ரத்த அழுத்தம் இல்லாமல் போகிறது. கண்களை பாதிக்கின்ற ரத்த அழுத்தத்தை போக்குகிறது. பார்வையை தெளிவுபடுத்தும். சோம்புவை பயன்படுத்தி படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம்: அரை ஸ்பூன் சோம்பு பொடி, சிறிது பனங்கற்கண்டுடன் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும்.
இதை குடித்துவர ஞாபக சக்தி அதிகரிக்கும். பல்வேறு நன்மைகளை கொண்ட சோம்பு உன்னதமான மருந்தாகிறது. உள் உறுப்புகளை தூண்டுகிறது. இதய ஓட்டத்துக்கு பலம் சேர்க்கிறது. சோம்புவை பயன்படுத்தி மலச்சிக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: சோம்பு, தனியா, உலர்ந்த திராட்சை, அத்திப்பழம். ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் தனியா, 10 உலர்ந்த திராட்சை, 2 அத்திப்பழம் ஆகியவற்றில் தண்ணீர் விட்டு ஊறவைத்து அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர மலச்சிக்கல் இல்லாமல் போகிறது. நச்சுக்களை வெளியேற்றுவதால் ஆசனவாய் புற்று வராமல் தடுக்கிறது. முகப்பரு மறைந்து தோல் ஆரோக்கியம் பெறும். சோம்பு மூளை நரம்புகளுக்கு பலம் கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இதய ஓட்டத்தை சீராக்குகிறது.
source : Dinakaran
No comments:
Post a Comment