Wednesday, March 23, 2016

"கூட்டு முறையில் விவசாயப் பண்ணையம் அமைத்தால் 50% அரசு மானியம்'


விவசாயிகள் கூட்டு முறையில் வேளாண் பண்ணையம் அமைத்து பயிர் செய்தால் 50 சதவீதம் அரசு மானியம் பெறலாம் என்று புதுச்சேரி வேளாண்துறை இயக்குநர் ஏ. ராமமூர்த்தி தெரிவித்தார்.
பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கல்லூரி மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக (தேசிய விதைத் திட்டம்) இணைந்து வேளாண் உற்பத்தியில் தரமான விதைகளின் பங்கு என்ற தலைப்பில்  கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் புதுச்சேரி வேளாண் துறை இயக்குநர் ஏ. ராமமூர்த்தி பேசியது:
காரைக்காலில் செயல்படும் வேளாண் கல்லூரியானது விவசாயிகளின் வளர்ச்சிக்கு சிறப்பாகச் செயல்படுகிறது. குறிப்பாக, விதை உற்பத்தியில் லாபம் அடையும் திட்டத்தில் பல்வேறு உத்திகளை விவசாயிகளுக்கு விளக்குகிறது. புதுச்சேரி அரசு, நிதி நெருக்கடியில் இருந்தபோதும், இந்தக் கல்லூரி நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
பாரம்பரிய விதைகளான சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற நெல் விதைகளை பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். எதிர்காலத்தில் இது நல்ல வளர்ச்சிப் போக்கில் இருக்கும்.
விவசாயிகள் தனித்தனியாகப் பயிர் செய்வதைக் காட்டிலும், மற்ற மாநிலங்களின் தேவையை அறிந்து, கூட்டு முறையில் பண்ணையம் அமைத்து உற்பத்தி செய்ய வேண்டும். உற்பத்திப் பண்ணையம் அமைப்பது குறித்து அரசிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும். இதன்மூலம் பயிர் செய்யப்படும்போது அரசு 50 சதவீத மானியம் அளிக்கிறது.
தேவையறிந்து உற்பத்தி செய்வதன் மூலமும், மானியத்தின் மூலமாகவும் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.
விதை உற்பத்தி குறித்து வேளாண் கல்லூரி முதல்வர் டி. ராமநாதன், ஒருங்கிணைந்த மேலாண்மை உத்தி குறித்து பேராசிரியர் ஆர். பூங்குழலன், ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறை குறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் கா. மதியழகன், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்தி குறித்து கே. குமார் ஆகியோர் பேசினர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் வேளாண் வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.
கருத்தரங்கில் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Source : Dinamani


No comments:

Post a Comment