வெளிநாட்டு வேலை கிடைத்தும் விவசாய ஆர்வத்தால் தாய்நாட்டை பிரிய மனமின்றி நிலத்தை பண்படுத்தி, தாய்லாந்து கொய்யா நடவில் சாதிக்கிறார், திண்டுக்கல் முள்ளிப்பாடியை சேர்ந்த சிவக்குமார்.
காலங்கள் மாற மாற பல்வேறு தொழில்நுட்பங்கள் பெருகி வருகின்றன. விவசாயத்தில் குறுகிய முதலீட்டில் அதிக லாபம் தரும் தாய்லாந்து கொய்யா சாகுபடி குறித்து அவர் கூறியதாவது:
தாய்லாந்து கொய்யா கன்று ரூ.350 வீதம் வாங்கினேன். ஒரு ஏக்கரில் 2 அடிக்கு 2 அடி குழி தோண்டி 15அடிக்கு 15அடி இடைவெளியில் அடர் நடவு முறையில் 400 கன்றுகள் நடவு செய்தேன்.
கொய்யாவுடன் சேர்த்து வேறு ஊடுபயிர் விளைவிக்க நினைத்தால் ஒரு ஏக்கருக்கு 150 கன்றுகள் நடவு செய்தால் போதும். நீர் தட்டுப்பாடான பகுதியில் சொட்டுநீர் பாசனம் சிறந்தது. நடவு செய்து 4 அல்லது 5 மாதங்களில் பூக்கத் துவங்கிவிடும். மரத்திற்கு காயை தாங்கும் சக்தி கிடைக்கும் வரை இரண்டரை ஆண்டுகள் பூக்களை பறித்துவிட வேண்டும். மாதம் ஒரு முறை மண்புழு உரம், நுண்ணுயிர் உரம் வைத்து தினமும் தண்ணீர் ஊற்றினால் போதும்.
மரம் நன்கு வளர்ந்த பின் ஏப்ரல், மே தவிர்த்து மற்ற மாதங்களில் மகசூல் அதிகம் கிடைக்கும். இந்த வகை கொய்யா நாட்டு கொய்யாவை காட்டிலும் அளவில் பெரிதாக இருக்கும்; விதைகள் அதிகம் இருக்காது.
ஒரு கொய்யா முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ வரை எடை இருக்கும். ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கிறேன். ஆண்டுக்கு ரூ.1 லட்சம் லாபம் கிடைக்கும்.
எந்த நிலத்தை வறண்ட பூமியென்று சொல்லி தவிர்த்தனரோ அங்கு தாய்லாந்து கொய்யா மூலம் லாபம் பெறுகிறேன். ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.ஒன்று முதல் ரூ.ஒன்றரை லட்சம் செலவு செய்தால் போதும். இரண்டே ஆண்டுகளில் செலவு தொகையை தாண்டி லாபம் பார்க்க ஆரம்பிக்கலாம், என்றார். இவரிடம் பேச : 90038 09797
Source : Dinamalar
.
.
No comments:
Post a Comment