தர்மபுரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தேங்காய் நார் கயிறு மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் சீனா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை வர்த்தகம் நடக்கிறது. தமிழகத்தில் தேங்காய் நார் கயிறு தயாரிப்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி முதலிடத்தில் உள்ளது. திண்டுக்கல், திருநெல்வேலி, பட்டுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அதிகளவில் கயிறு தயாரிக்கப்படுகிறது. இதில் தர்மபுரி மாவட்டம் நான்காவது இடத்தில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேங்காய் மட்டையில் நார் பிரித்தெடுத்தல், நாரிலிருந்து கயிறு தயாரித்தல், முறுக்கேற்றப்பட்ட கயிறு, மெத்தைக்கான விரிப்புகள், மிதியடிகள் தயாரிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் டவுன், அனுமந்தபுரம், கெரகோடஅள்ளி, கள்ளம்பட்டி, மண்ணாடிப்பட்டி, பாளையம்புதூர் பகுதிகளில் தயாரிக்கப்படும் கயிறு, மெத்தைக்கான விரிப்புகள், மிதியடிகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள், சீனா, ஐரோப்பியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், பீகார், ெகால்கத்தா, பெங்களூர், மகாராஷ்டிரா, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. காரிமங்கலம், பாலக்கோடு ஒன்றியங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இதை சிறுதொழிலாக செய்து வருகின்றனர். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்டவை இயங்குகின்றன. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.10 கோடி வரை கயிறு வர்த்தகம் நடந்து வருகிறது. இதுகுறித்து தென்னை நார் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியது: ‘தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் தென்னை மரங்கள் அதிகமுள்ளன. அதிலிருந்து கிடைக்கும் தேங்காய் மட்டையில் நார் எடுத்து, கயிறு தயாரிக்கப்படுகிறது. 35 கிலோ எடையுள்ள ஒரு பண்டல் தேங்காய் நார் ரூ.490 லிருந்து ரூ.525 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நாரிலிருந்து கயிறு திரித்து கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்கிறோம். 30 கிலோ கொண்ட ஒரு பண்டல் ரூ.810 முதல் ரூ.1100 வரைக்கும் விற்பனை செய்கிறோம். மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.10 கோடி வரை கயிறு மற்றும் பொருட்கள் வர்த்தகம் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Source : Dinakaran
No comments:
Post a Comment