மக்காச்சோள சாகுபடியில் சாதனை படைத்த பெரம்பலூர் பெண் விவசாயி பூங்கோதைக்கு பிரதமர் நரேந்திர மோடி விருது வழங்கினார். அப்போது காலைத்தொட்டு பிரதமர் ஆசி பெற்றதை வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் என்று கூறுகிறார் பூங்கோதை. பெரம்பலூர் மாவட்டம் மக்காச்சோள சாகுபடியில் தொடர்ந்து தமிழக அளவில் முதலிடம் பெற்று வருகிறது. இந்தாண்டு 1.27 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோள மகசூல் பெருக்க, முந்தைய கலெக்டர் தரேஸ் அகமது, ‘ஒரு ஹெக்டரில் ஒரு லட்சம் பெருக்கும் திட்டத்தை’ அறிமுகப்படுத்தினார். இதன்படி குறைந்தபட்சம் ஒரு ஹெக்டர் அதாவது இரண்டரை ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிக்கு, வேளாண் துறை மூலம் ஆலோசனைகளை வழங்கி, இடுபொருட்கள் இலவசமாக வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
அந்தவகையில் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அடுத்த இனாம் அகரத்தை சேர்ந்த பூங்கோதை(60) என்பவர் மாவட்ட நிர்வாக உதவியுடன், இரண்டரை ஏக்கரில் மக்காச்சோள சாகுபடியில் ஈடுபட்டார். ஏற்கனவே ஏக்கருக்கு 21 முதல் 25 மூட்டைகளை அறுவடை செய்து வந்த பூங்கோதை 2014-2015ம் ஆண்டில் ஒரு ஏக்கரில் 51 மூட்டைகளை அறுவடை செய்துள்ளார். இதன்படி 14,233 கிலோ மக்காச் சோளத்தையும் அறுவடை செய்துள்ளார். இத்தகவலை பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை, புள்ளியியல்துறை இணைந்து நடத்தும் பயிர்அறுவடைப் பரிசோதனைக் குழு ரேண்டம் எண் அடிப்படையில் தேர்வுசெய்து, மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பினர். இதை மத்திய அரசும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தது. பூங்கோதையின் உற்பத்தி அளவே அதிகம் உள்ளதை கண்டறிந்து அவரை மத்திய அரசின் ‘கிர்ஷி கர்மான்’ எனப்படும் தனிநபர் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 18ம் தேதி தமிழக தலைமை செயலகத்தால் வரவழைக்கப்பட்ட பூங்கோதை, டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 19ம் தேதி பூங்கோதைக்கு பிரதமர் மோடி கிர்ஷி கர்மான் விருதும், ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார். மேலும் அவரது கால்களைத் தொடுவதுபோல் குனிந்து கைகளை நீட்டித் தொட்டு வணங்கினார்.
60 வயது மூதாட்டியான பெண் விவசாயி பூங்கோதை, கணவர் முருகன் இறந்த பிறகும் தளராமல் விவசாயத்தில் ஈடுபட்டு, அதில் தேசிய அளவில் சாதனை படைத்தது பெரம்பலூர் மாவட்டத்திற்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை குறித்து பூங்கோதை கூறுகையில், ‘வேளாண் அதிகாரிகளின் ஆலோசனையுடன் மக்காசோளம் பயிரிட்டேன். விதைக்கும் முன் வயலுக்கு மாட்டு எருவும், ஏரி மண்ணும் ேபாட்டு உழவு செய்தேன். ரசாயன உரங்களை பெருமளவு குறைத்துவிட்டேன். அறுவடையின்போது எதிர்பாராத அளவுக்கு 14.4 டன் மகசூல் கிடைத்தது. படிப்பறிவில்லாத எனக்கு பிரதமர் மோடி விருது வழங்கி, ஆசி பெற்றது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்’ என்றார். இதேபோல் கடந்த 1999ம் ஆண்டு மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளையின் சேவையை பாராட்டி அவருக்கு அப்போதையை பிரதமர் வாஜ்பாய் விருது வழங்கி, அவரது காலைத்தொட்டு வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : dinakaran
No comments:
Post a Comment