தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற மகாகவியின் சிந்தனை, உணவை உற்பத்தி செய்ய உதவும் நீருக்கும் பொருந்தும். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு போதிய நீர்ப்பாசன வசதி இருந்தால் மட்டுமே தேவையான உணவை உற்பத்தி செய்ய முடியும். இதை கருத்தில் கொண்டே "வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்' என பாரதி கண்ட கனவு, முயற்சியின்மையால் இன்னும் கனவாகவே உள்ளது.
பருவமழை பொய்ப்பதும், குறைவதும் புதிதல்ல. ஐந்து ஆண்டுகள் கொண்ட பருவகால சுழற்சியில் ஓர் ஆண்டில் நல்ல மழையும், மற்றோர் ஆண்டில் மிகக் குறைவான மழையும் மீதமுள்ள 3 ஆண்டுகளில் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையும் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற முதுமொழிக்கேற்ப எக்காரியத்தையும் சரியான தருணத்தே செய்து முடிக்க வேண்டும். தவறினால் பலன் கிடைக்காமல் போகும். அத்துடன் பல விபரீதங்களும் ஏற்பட்டு விடலாம். இது நீர்நிலை ஆதாரங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு மிகவும் பொருந்தும்.
ஏனெனில், பருவமழை அதிகம் கிடைக்கும் ஒரு சில மாதங்களில், நாள்களில் மழை வெள்ளமும் திடீர் என்று பெருகும்பொழுது அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், சென்ற டிசம்பரில் நாம் பார்த்ததுபோல் உயிர்ச்சேதம், பொருள்சேதம், பயிர் நிலம் பாதிப்பு போன்றவை ஏற்படும். இதன் தொடர் விளைவுகளாகிய மின் விநியோகம் பாதிப்பு, சாலைச் சீர்கேடுகள், பொருள்களின் விலையேற்றம், வீடுகள் இடிதல், தொற்றுநோய் பரவல் போன்ற பல்வேறு பிரச்னைகளும் ஏற்படும்.
அண்மைக் காலத்தில் மக்கள்தொகைப் பெருக்கத்தினால் மனித சமுதாயத்தின் நீர்த் தேவை ஆண்டிற்கு 4 சதவீதம் அதிகரித்து வருகின்றது. ஆனால், அதைச் சரிகட்டும் அளவுக்கு நீரின் அளிப்பு அதிகரிப்பதாக இல்லை. அதிக அளவு மழை பெறும் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 2-ஆம் இடம் வகித்தபோதும் தொடர்ந்து வறட்சியான நிலையே பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது.
இதற்கான முக்கியக் காரணம் நம் நாட்டில் தேவையான அளவு மழை பெய்த போதிலும், அதனைச் சேமித்து வைப்பதற்கான அடிப்படையை இன்றளவும் அரசோ அல்லது மக்களோ சிறப்பாக மேற்கொள்ளவில்லை. உதாரணமாக, இந்தியாவில் தற்போது மழை மற்றும் ஆறுகள் மூலம் கிடைக்கும் நீரை சேமிக்கும் அளவு ஆண்டிற்கு 30 நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. மீதமுள்ள நீர், சேமிப்புத் திறன் இன்மையால் ஆண்டுதோறும் கடலில் சென்று கலந்து விடுகிறது. ஆனால், வளர்ந்த நாடுகள் ஏறத்தாழ 900 நாள்களுக்குத் தேவையான மழை, ஆற்று நீரை உரிய முறையில் சேமித்து பயன்படுத்தும் அளவு திறன் பெற்றுள்ளன.
சுருங்கக் கூறினால், தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு 921 மி.மீ. இந்தியாவின் சராசரி மழையளவு 1,580 மி.மீ.க்கும் அதிகமாகும். 1 மி.மீ. மழை மூலம் 1 கிரவுன்ட் (2400 சதுர அடி) நிலத்தில் 223 லிட்டர் நீர் பெறலாம். ஆக, தமிழக (1.303 லட்சம் சதுர கி.மீ.) மற்றும் இந்திய (32.873 லட்சம் சதுர கி.மீ.) நிலப்பரப்பில் பெய்யும் மழையளவை இந்தியா முழுவதிலும் 3,000 இடங்களில் பதிவு செய்யப்பட்டு ஏறத்தாழ 40 வானிலை ஆய்வு மையங்களால் வாரந்தோறும் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் நமது நீர் சேமிப்புத் திறன் இன்னும் மேம்படவில்லை.
மேலும், இந்தியாவில் அதிகளவு மழை இருந்தும், சராசரியாக நபர் வாரி நீர் சேமிப்புத் திறனை ஆராய்ந்தால் இது அமெரிக்காவில் தனிநபருக்கு ஆண்டுக்கு 6,150 கியூபிக் மீட்டராகவும், ரஷியாவில் 6,013 கியூபிக் மீட்டராகவும், ஆஸ்திரேலியாவில் 4,729 கியூபிக் மீட்டராகவும், சீனாவில் 2,486 கியூபிக் மீட்டராகவும் உள்ளது. ஆனால், இந்தியாவில் இது சொற்ப அளவாக 262 கியூபிக் மீட்டராகவே உள்ளது. இந்நிலையே நாம் எந்த அளவு அதளபாதாளத்தில் நீர் சேமிப்பில் திறன் அற்று உள்ளோம் என்பதற்கு உதாரணமாகும்.
தமிழகம் மற்றும் இந்தியாவின் வேளாண் சாகுபடி நிலப்பரப்பு, நீர்ப்பாசனப் பரப்பு, சாகுபடி பயிர்களின் உற்பத்தித் திறன் மற்றும் பயிர் அடர்த்தி இவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்திய அளவில் இவை அனைத்திலும் 1950 முதல் 2015-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதிகரித்த நிலையில் இருப்பதையும், தமிழகத்தில் பயிர்களின் உற்பத்தித் திறன் தவிர மற்ற அனைத்தும் இதே காலகட்டத்தில் தொடர்ந்து குறைந்து வருவதையும் புள்ளி விவரங்களின் மூலம் தெளிவாக காணமுடிகிறது. இந்நிலைக்கான காரணங்களைக் காண்போம்.
வேளாண்மையில் மானாவாரி சாகுபடியில் கிடைக்கும் உற்பத்தித் திறனை விட நீர்ப்பாசன நிலத்தில் கிடைக்கும் உற்பத்தி 3 முதல் 5 மடங்கு வரை அதிகம் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் மூன்று முக்கிய நீராதாரங்கள் ஏரிப் பாசனம், கால்வாய்ப் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம். இவைகளுள் 2012-13ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி தமிழகத்தில் மொத்தம் 41,127 ஏரிகள் உள்ளன. இவற்றின் மொத்த பதிவு செய்யப்பட்ட பாசனப் பரப்பு 10 லட்சத்து 11 ஆயிரத்து 860 ஹெக்டேர்.
தமிழக ஏரிகள் இரு வகையாக பகுக்கப்பட்டுள்ளன. ஒன்று, 40 ஹெக்டேருக்கும் குறைவாக உள்ள பஞ்சாயத்து அமைப்புகளின் மேற்பார்வையில் உள்ள சிறிய ஏரிகள். இவைகளின் எண்ணிக்கை 33,142. இரண்டு, 40 ஹெக்டேருக்கும் அதிகமாக உள்ள பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் பெரிய ஏரிகள்; இவைகளின் எண்ணிக்கை 7,985 ஹெக்டேர்.
இப்புள்ளி விவரங்கள் தமிழக அரசால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் "தமிழகம் - ஓர் பொருளாதார மதிப்பீடு' என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1950 முதல் 2015 வரையிலான மேற்கூறப்பட்ட மூன்று நீர்ப்பாசன சாகுபடி நிலப்பரப்பை ஆராய்ந்தால் 1950-களில் ஏறத்தாழ 8 லட்சம் ஹெக்டேராக இருந்த கால்வாய் ஆற்று பாசனம், 2010-களில் ஏறத்தாழ 7 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில், ஏரிப் பாசனம் 10 லட்சம் ஹெக்டேரிலிருந்து தற்போது 5.1 லட்சமாக பாதியாகக் குறைந்துள்ளது. 1960-களில் ஏரிப்பாசன சாகுபடிப் பரப்பு 9.1 லட்சம் ஹெக்டேராகும்.
ஆனால், ஏரிப்பாசனம் மற்றும் கால்வாய்ப் பாசனப் பரப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே சென்றாலும், அனைவருக்கும் புரியாத புதிராக உள்ள கிணற்றுப் பாசன பரப்பு 1950-களில் தமிழகத்தில் 5 லட்சம் ஹெக்டேராக இருந்து, தற்போது 2010களில் 14.8 லட்சம் ஹெக்டேராக 3 மடங்கு அதிகரித்து விட்டது.
கிணற்றுப் பாசனத்தைப் பற்றி சிறிது யோசித்தால் பல்வேறு உண்மைகள் விளங்கும். 1969-இல் பசுமைப் புரட்சியின் ஆரம்பத்தில் இந்தியாவில் 64 லட்சத்து 85 ஆயிரம் கிணறுகளும், தமிழகத்தில் 11 லட்சத்து 86 ஆயிரம் கிணறுகளும் இருந்தன. இதுவே 2012-இல் இந்தியாவில் 1 கோடியே 43 லட்சத்து 11 ஆயிரம் ஆகவும், தமிழகத்தில் 18 லட்சத்து 13 ஆயிரம் ஆகவும் அதிகரித்துள்ளது. இப் புள்ளிவிவரங்களில் இருந்து கிணற்றுப் பாசனம் இந்தியாவில் 121 சதவிகிதமும் தமிழகத்தில் 53 சதவிகிதமும் அதிகரித்துள்ளதை அறிய முடிகிறது.
கிணறுகளுக்கு கிடைக்கும் நீரைப்பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். ஏதோ ஆகாயத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் இக்கிணறுகளுக்கு இரவு நேரங்களில் தண்ணீர் வந்து சேர்ந்து விடுவதில்லை. பெய்கின்ற மழைநீர் மூலம் மட்டுமே (ஆறுகள் அல்லது ஏரிகள் மூலம்) இக்கிணறுகளுக்கு நீர் கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஒருபுறம் கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மறுபுறம் அவைகளுக்கு நீர் வழங்கும் கால்வாய் மற்றும் ஏரிகளின் பரப்பு மற்றும் ஏரிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் கிணற்றுப்பாசனம் அதன் நீர் அளிப்பின் உச்சக்கட்ட பங்களிப்பை அடைந்துவிட்டது. இனி இது மேலும் தொடர வாய்ப்புகள் மிகவும் குறைவு.
நீர் பயன்பாடு பற்றி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவின்படி, நிலநீர் பயன்பாடு 1993-க்கு முந்தைய 25 ஆண்டுகளில் 15 சதவீதம் மட்டுமே அதிகரித்த போதிலும் நிலத்தடி நீரின் பயன்பாடு 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்படி நிலத்தடி நீர் உபயோகம் அதிகரித்ததன் காரணம், ஏற்கெனவே பூமியில் பல்லாயிரம் ஆண்டுகளாக சேமிக்கப்பட்டுள்ள நிலத்தடி நீர் பெரியளவில் உறிஞ்சப்பட்டுள்ளதே ஆகும். மீண்டும் அந்நிலத்தடி நீர்மட்டம் பழைய நிலைக்கு வரும் அளவு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததால் வெகுவாக கீழ்நோக்கிச் சென்றுவிட்டது.
இச்சூழ்நிலையில், 1960-களில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியைப் போல், தற்போது நீர்ச் சிக்கன நடவடிக்கை மற்றும் நீர் உபயோகத் திறன் மேம்பாட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். இதற்கு அடிப்படையாகக் கருதப்படுவது நெல் சாகுபடியில் சொட்டு நீர்ப் பாசனத்தை நாடு முழுவதும் புகுத்துவதே ஆகும். இதனைப் பின்பற்றினால் தற்போது நெல் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் நீரில் 50 முதல் 60 சதவீதம் வரை சேமிக்கப்படுவதோடு நெல் உற்பத்தித் திறனும் தற்போதைய அளவைவிட இருமடங்குக்கும் கூடுதலாக கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் திறவுகோலாக விவசாயிகளிடையே இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். மேலும், கிணற்றுப் பாசனம் இதேநிலையில் தன் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அம்முயற்சிகளின் அடிப்படையே ஏரி, குளங்களைத் தூர்வாரி, மக்கள் தங்கள் சொந்த முயற்சியில் கழிவுநீர்க் குட்டைகளைப் பேரளவில் அமைத்து, பெய்கின்ற மழைநீரை அதிகபட்சமாக - வீடுகள் முதற்கொண்டு பாசன ஆதாரங்கள் வரை - சேமிக்க முயற்சிகள் மேற்கொள்வதும், ஆறுகள் மூலம் கிடைக்கும் நீரில் கால்வாய்ப் பாசனத்தை செம்மைப்படுத்துவதும் முக்கியமாகும்.
நிலநீர்ப் பாசன ஆதாரத்தில் குறைவு ஏற்பட்டால் அது நிலத்தடிநீர்ப் பாசனத்தை நேரடியாக பாதிப்படையச் செய்யும் என்பது கண்கூடான உண்மை என்பதனை அறிந்து அரசும், மக்களும் நீர் சேமிப்பில் முழு மூச்சுடன் செயல்பட்டால் நீர்ப் பற்றாக்குறை நீங்கும்.
source : Dinamani
No comments:
Post a Comment