நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் விளையும் மூலிகைகளுக்கு, பல நோய்களை குணப்படுத்தும் வல்லமை உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
மைசூர் ஜே.எஸ்.எஸ்., பல்கலை கழகம், இந்திய மருந்தியல் சங்கம் சார்பில், ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில், இரண்டாம் நாள் தேசிய கருத்தரங்கு நேற்று நடந்தது.
இதில், தாவரவியல் வல்லுனர் டாக்டர் ராஜன் பேசியதாவது:நமது நாட்டில், அரிய வகை மூலிகைச் செடிகள் அதிகளவில் வளர்கின்றன. மனிதன், காடுகளை நம்பி வாழ்ந்த காலத்தில், மூலிகைகளை பயன்படுத்தி நோய்களுக்கு நிவாரணம் கண்டனர். தற்போதைய நகர வாழ்க்கையில், அவை, மருந்து, மாத்திரையாக மாற்றம் பெற்றுள்ளன.நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் விளையும் மூலிகைகளுக்கு, பல நோய்களை குணப்படுத்தும் வல்லமை உள்ளது. இவற்றை பழங்குடியின மக்கள் நோய்க்கு தகுந்தவாறு, பயன்படுத்துகின்றனர். குறிப்பாக,
சளி, காய்ச்சல், தலைவலி ஆகியவற்றிற்கு, நீலகிரியில் விளையும் செண்பக பூ மரப்பட்டைகளில் தயாரிக்கப்படும் கசாயம் மிகுந்த பயன் அளிக்கிறது. வாதங்கொல்லி இலை, வாதம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வாகிறது.உஷ்ணத்தால், ஏற்படும் 'பைல்ஸ்'களுக்கு காட்டு வெங்காயம் சிறந்த மருந்தாக உள்ளது. மஞ்சள் காமாலைக்கு, கீழாநெல்லி, நீலகிரியில் விளையும், பெரு கீழாநெல்லி மூலிகைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வயிற்று வலியை குணப்படுத்தும் வசம்பு தாய்பாலில் கலந்து கொடுக்கப்படுகிறது. இதில், பல மூலிகைகளை ஒன்று சேர்த்து, ஒரு சில நோய்களை குணப்படுத்தும் வித்தைகளை நமது பழங்குடியினர் கற்று வைத்துள்ளனர். இவர்கள், இந்த செயல்முறைகளை கள ஆய்வின் போது வெளிப்படுத்தினால், அந்த பயன்பாட்டின் பங்கு குறித்தும், தயாரிப்புக்கும் ஜே.எஸ்.எஸ்., பல்கலை கழகத்தின் உதவியுடன், பழங்குடியினருக்கு காப்புரிமை பெற்றுத்தரப்படும். இதன்மூலம் கிடைக் கும் தொகை, பழங்குடியின சமுதாய வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும். இவ்வாறு ராஜன் பேசினார்.
இதை தொடர்ந்து, பல்வேறு ஆதிவாசி மக்களிடம், மூலிகை பயன்பாடு குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டன.
Source : Dinamalar
No comments:
Post a Comment