Wednesday, March 30, 2016

திசு வளர்ப்பு முறையில் அரியவகை மூலிகை செடிகள் உற்பத்தி



காரைக்குடி,
அழகப்பா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர்கள், மாணவர் இணைந்து திசுவளர்ப்பு முறையில் அரியவகை மூலிகை செடியான கரிம்குறிஞ்சி செடிகளை உற்பத்தி செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அரியவகை மூலிகைகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ரமேஷ், துறைத் தலைவர் கருத்தப்பாண்டியன், ஆராய்ச்சி மாணவர் ரமேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 3 ஆண்டுகளாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள கரிம்குறிஞ்சி என்ற அரியவகை மூலிகை செடி குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த கரிம்குறிஞ்சி மூலிகையானது பல்வேறு மருத்துவ குணங்கள் வாய்ந்தது. குறிப்பாக மூட்டுவலி, ஆஸ்துமா, தோல் வியாதிகள், தீக் காயங்கள், ஒவ்வாமையை தடுக்க இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த கரிம்குறிஞ்சி செடியில் அதிக அளவு பெட்டுலின், ஸ்டிக்மாஸ்டீரால், டேக்ஸ்சரால் போன்ற மருத்துவ வேதிப்பொருட்கள் காணப்படுவதால் சித்தமருத்துவர்கள், ஆயுர்வேத பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களால் அதிக அளவில் எடுக்கப்பட்டு தற்போது இந்த மூலிகை செடியினமே அழியும் நிலையில் உள்ளது. இதுகுறித்து சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு இந்த தாவரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, அழிந்து வரும் இந்த தாவரத்தை சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
திசு வளர்ப்பு முறைஇந்தநிலையில் அழகப்பா பல்கலைக்கழக உயிரி தொழில் நுட்பவியல் துறைத்தலைவர், இணைப் பேராசிரியர், ஆராய்ச்சி மாணவர் ஆகியோர் இணைந்து இந்த கரிம்குறிஞ்சி செடியினை திசு வளர்ப்பு முறையில் வளர்ப்பது குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையினை இந்திய அறிவியல் மற்றும் மத்திய அரசின் தொழில்நுட்பக் கழகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வுத்திட்டம் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தினரால் அங்கீகரிக்கப்பட்டு இந்த திட்டத்திற்காக ரூ.15.28 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
அதன்படி இந்த நிதியினைப் பயன்படுத்தி திசு வளர்ப்பு முறையில் சுமார் 1000 கரிம்குறிஞ்சி செடிகள் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மருத்துவ குணம் வாய்ந்த இந்த மூலிகை செடிகளை வனத்துறையினரிடம் வழங்கும் நிகழ்ச்சி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா, வனத்துறை மண்டல மேலாளர் அசோகன், வனத்துறை அதிகாரி தியாகராஜன் ஆகியோரிடம் திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட 1000 கரிம்குறிஞ்சி செடிகளை வழங்கினார்.
இந்த செடிகள் உடனடியாக காரைக்குடியில் இருந்து ஊட்டிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வனப்பகுதியில் இந்த செடிகளை பயிரிட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment