கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு அணையையொட்டிய மலைப் பகுதிகளில் 86 வகைப் பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். பிரபல பறவை ஆர்வலரான இவரது தலைமையில், முன்னோடிப் பறவை ஆர்வலர் சத்தியன் மேம்பையூர் மற்றும் ஆண்கள், பெண்கள் உள்பட 30 பேர் கொண்ட குழுவினர் சிற்றாறு அணை 2, அதையொட்டிய தனியாருக்குச் சொந்தமான காடுகளில் 2 நாள்களாக இரவும் பகலும் "பறவைக் கண்காணிப்பு' (ஆண்ழ்க் ரஹற்ஸ்ரீட்ண்ய்ஞ்) செய்தனர்.
அப்போது, 5 வகை ஆந்தைகள், அபூர்வ வகையான தேன் பருந்து, காட்டுக் கோழி, பலவகை சிட்டுக் குருவிகள், கிளிகள், கொக்குகள், மரங்கொத்திகள், புறாக்கள் உள்ளிட்ட 86 வகைப் பறவையினங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் பறவைகளைக் கண்காணித்து வருகிறேன். இந்தியாவில் மொத்தம் 1,400-க்கும் அதிகமான பறவையினங்கள் உள்ளன. அவற்றில், 120 வகைகள் அழியும் தருவாயில் உள்ளன.
தமிழகம், கேரளத்தில் சுமார் 500 வகைப் பறவையினங்கள் உள்ளன. இவற்றில் 20 முதல் 30 வகைப் பறவைகள் அழியும் நிலையில் உள்ளன. வனங்கள் அழியும்போது பறவைகளும், விலங்கினங்களும் அழிகின்றன. நாம் அவற்றின் இடங்களை ஆக்கிரமித்துவிட்டு, அவை தாக்கும்போது அவற்றை அழிக்க முயல்கிறோம். இவ்வாறு செய்தால் இன்னும் சில ஆண்டுகளில் பறவையினங்களும், விலங்கினங்களும் அழிந்துவிடும். குறிப்பாக, பறவையினங்கள் அழிந்துவிடும். தமது தலைமுறைக்கு பறவைகளை வெறும் படமாகக்தான் காட்டும் அவலநிலை ஏற்படும்.
பறவைகளாலும் உணவு உற்பத்தி அதிகரிக்கிறது. என்னாலும் ஒரு பறவையைக் காப்பாற்ற முடியும் என, ஒவ்வொரு தனி மனிதனும் எண்ண வேண்டும். பிற உயிரினங்களுக்காக வாழ வேண்டும். ஒவ்வொருவரும் பறவைகளுக்காக வீட்டுத் தோட்டத்தில் பழ மரங்களை நட வேண்டும். வீட்டருகே சிறிய தொட்டிகளில் தண்ணீர் வைக்க வேண்டும்.
இங்கு சில வாரங்களுக்கு முன்பு தமிழகப் பறவை மனிதர் பால்பாண்டியனுடன் வந்து பறவைகளைக் கண்காணித்தேன். இப்போது, இரவிலும் கண்காணிக்கும் வகையில் குழுவாக வந்துள்ளோம். ஆச்சரியமூட்டும் வகையில் 86 பறவையினங்களை எங்கள் குழுவினர் படம் பிடித்துள்ளனர். இவற்றில் பல பறவைகள் அபூர்வமானவை. மேலும் அவை இடம்பெயரும் பறவைகள். இங்கு இசைப் பறவைகள் அதிகமாக உள்ளன. 5 வகை ஆந்தைகள் உள்ளன. பலவகை சிட்டுகள், மரங்கொத்திகள், கொக்குகள், காட்டுக் கோழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை அழியாமல் தொடர்ந்து காக்க வேண்டும். மேலும், இப்பகுதி பறவைகள் சரணாலயமாகவும் மாற்றப்படவேண்டும். அதற்கான முழுமையான சூழலை இங்கு உருவாக்க வேண்டும் என்றார்.
source : Dinamani
No comments:
Post a Comment