Tuesday, March 15, 2016

50 ஆயிரம் டன் சின்னவெங்காயம் சேமிப்பு

இறக்குமதியாலும், அதிகவிளைச்சலாலும் 3மடங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நல்லவிலைக்காக 50ஆயிரம்டன் சின்னவெங்காயத்தை பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பட்டறைகளில் சேமித்து வைத்துள்ளனர்.
தமிழகத்திலேயே அதிகப்படியான சின்னவெங்காயம் பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுவதால் கடந்த 10 ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டம் சின்ன வெங்காய சாகுபடியில் முதலிடம் வகித்துவருகிறது. இங்கு கடந்தாண்டு 6,432ஹெக்டேரில் அதாவது 15,887 ஏக்கரிலும், நடப்பாண்டு 8,868 ஹெக்டேரில் அதாவது 21,903ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்த வெங்காயத்தை விவசாயிகள் வயல்களிலேயே பட்டறை அமைத்துப் பாதுகாத்துவரும் வழக்கம் தொன்றுதொட்டு காணப்படுகிறது.

சுற்றுவட்டார வியாபாரிகளை வயல்களுக்கே அழைத்துவந்து பேரம்பேசி விற்பனை செய்வதற்கு மாற்றாக மாவட்ட நிர்வாகம் செட்டிக்குளத்தில் வெங்காயத்தை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தது. பின்னர் வாராவாரம் சின்னவெங்காய ஏலம் தொடர்ந்து நடந்து வருவதால், வெளிமாவட்ட வியாபாரிகளும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு நேரில் வந்து சின்னவெங்காயத்தின் தரமறிந்து அதற்கேற்ப விலைபேசி வாங்கிச்சென்றனர். 

இருந்தபோதும் வெங்காயத்தைப் பாதுகாக்கிற பட்டறை அமைக்கும் முறைமட்டும் மறைந்து விடாமல் இருந்து வருகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு 6016 ஏக்கரில் சாகுபடிப் பரப்பு அதிகரித்து உற்பத்தியும் கூடியுள்ளது. அதேநேரம் கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்தும், தமிழகத்தில் விளாத்திக்குளம், கோவை, பல்லடம், பொள்ளாச்சி, மதுரை, நெல்லை, காரமடை உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து சின்னவெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருவது விவசாயிகளுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வியாபாரிகள் விவசாயிகளின் வயல்களுக்கு சென்று மிகக்குறைந்த விலைக்கு வெங்காயத்தை விலைபேசி வருகின்றனர்.

அதாவது, கிலோ ரூ.8க்கும், ரூ.10க்கும் பேரம் பேசுகின்றனர். மிகநல்ல வெங்காயமே உழவர்சந்தையில் ரூ.12க்குக் கிடைக்கும்போது, விவசாயிகள் வேறெதுவும் பேச வழியின்றி விழிபிதுங்கித் தவிக்கின்றனர். பொங்கல் சமயத்தில் புதுவெங்காயம் ரூ.35 முதல் ரூ.45வரை விற்கப்பட்டது. விதைவெங்காயம் ரூ.50முதல் ரூ.60வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது குறைந்தபட்சம் ரூ.8க்கும் அதிகப்பட்சமாக ரூ.15க்கு மேல் சின்னவெங்காயத்தை விற்கவே முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

இதனால் தங்கள் சின்னவெங்காயத்திற்கு உரிய விலைகிடைக்கும் வரை யாருக்கும்விற்காமல், ஏலத்திற்கும் கொண்டு செல்லாமல், மீண்டும் வயல்களில் பட்டறை அமைத்து பதுக்கிவைத்து இறக்குமதி சீசன்முடிவதற்காக காத்திருக்கத் தொடங்கியுள்ளனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 50ஆயிரம்டன் சின்னவெங்காயம் பட்டறைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 1மாதம்கழித்து விலையேறினால் அவை விற்பனைக்காக வெளியே வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Source : Dinakaran

No comments:

Post a Comment