Thursday, March 10, 2016

விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழும் 2 பட்டதாரி வாலிபர்கள்

சீர்காழியில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு முன்னோடியாக 2 பட்டதாரிகள் திகழ்கின்றனர். 
நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் ராஜ்குமார் (42). பிஇ படித்து விட்டு லண்டனில் மரைன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் இயற்கை விவசாயம் செய்ய ராஜ்குமாருக்கு ஆர்வம் ஏற்பட்டது.  

இதைதொடர்ந்து அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு புளிச்சகாட்டில் தங்களுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அதில் பழமைவாய்ந்த நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கிச்சடி சம்பா, பூங்கார், சீரக சம்பா, வாசனை சீரக சம்பா, கருப்பு கவுனி, இலுப்பைபூ சம்பா, சர்வதி போன்ற நெல் ரகங்களை பயிரிட்டு இயற்கையான முறையில் அதை விளைவித்து விற்பனை செய்து வருகிறார். இவரது வயல்களில் பயிரிடப்படும் நெல் மற்றும் காய்கறிகளுக்கு இயற்கை உரங்கள் தேவைப்படுவதால் தனது வயல் அருகிலேயே ஆடு, மாடுகளை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் இயற்கை உரத்தை பயன்படுத்தி வருகிறார். 

இதேபோல் சிதம்பரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (34). எம்பிஏ படித்து விட்டு கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு குமாரகுடியில் 52 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.  தற்போது முள்ளங்கி, பாகை, கொத்தவரங்காய், நூல்கோல், பீக்கங்காய், கத்திரி போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார். இவர்கள் இருவரும் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை நடத்தி வரும் நிம்மேலியை சேர்ந்த சுதாகர் (35) நடத்தி வரும் நலம் இயற்கை பல்பொருள் அங்காடியில் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். இதை சுதாகர் குறைந்த விலையில் வாங்கி பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார். 

நலம் பாரம்பரிய அறக்கட்டளை நடத்தி வரும் சுதாகர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் பாராட்டு பெற்றுள்ளார். இதுகுறித்து சுதாகர் கூறுகையில், இயற்கை விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டதால் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை துவங்கி விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும் பூங்கார், மாப்பிள்ளை சம்பா, சீரகச்சம்பா, வாசனை சீரகச்சம்பா, கிச்சடி சம்பா, கருடன் சம்பா, இலுப்பைப்பூ சம்பா, கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, தூய மல்லி, சர்வதி, வெள்ளைப்பொன்னி உள்ளிட்ட பாரம்பரிய ரகங்கள் நெல்லாகவும், அரிசியாகவும் கிடைக்கும். 
 இயற்கையான முறையில் காய்கறி, பழங்கள், நெல் வகைகள் சாகுபடி செய்து எங்களிடம் கொண்டு விற்பனை செய்யலாம் என்றார்.

Source : dinakaran

No comments:

Post a Comment