Thursday, March 10, 2016

மானாவாரி நிலத்தில் பயிரிட கேழ்வரகு, எள் இருப்பு உள்ளது

அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானாவாரி நிலத்தில் பயிரிடுவதற்கு ஏற்ற சிறுதானியங்களான கேழ்வரகு மற்றும் எண்ணெய் வித்து பயிரான எள் போன்றவை இருப்பு உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் முத்தையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தற்போது வெயில் காலம் துவங்கியுள்ளதால் மானாவாரியில் பயிரிடுவதற்கு ஏற்ற பயிரான கேழ்வரகு சித்திரை பட்டத்தில் (ஏப்ரல், மே) பயிரிடலாம். 

ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 15 முதல் 20 கிலோ விதையளவும், விதைப்பதற்கு முன் விதை கடினமாக்குதல் முறையை பின்பற்றினால் முளைப்புதிறன் அதிகரிப்பது மட்டுமின்றி நாற்றுகளுக்கு வீரியம் உண்டாவதுடன் வறட்சியை தாங்கும் திறன் ஏற்படுகிறது. கேழ்வரகு பயிரிட மிக குறைந்த அளவு நீரே போதுமானது. மேலும், தற்போது உள்ள நீரினை பயன்படுத்தி மானாவாரியில் எள் பயிரிட ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ விதையளவு மட்டும் போதுமானது. 

விதைப்பதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மாவிரிடி, திரம் அல்லது 2 கிராம் கார்பான்டாசின் கொண்டு விதைநேர்த்தி செய்து, விதையளவில் 4 மடங்கு மணலுடன் விதையை கலந்து நிலத்தின் மேற்பரப்பில் விதைப்பு செய்து பயன்பெறலாம். மேலும் இதற்கான விதைகள் ஆவுடையார்கோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கும் என வேளாண்மை உதவி இயக்குனர் முத்தையா தெரிவித்துள்ளார்.

source : Dinakaran

No comments:

Post a Comment