விராலிமலை, அன்னவாசல் ஒன்றியத்தில் வேளாண் துறை சார்பில் 60 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் கருவிகளும் உள்பட 318 விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இலுப்பூர் வேளாண் விற்பனைக் கூட வளாகத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் 318 விவசாயிகளுக்கு ரூ. 1.19 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழங்கிப் பேசியது:
தமிழக அரசு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இடுப்பொருள்கள் மற்றும் வேளாண் கருவிகளை மானிய விலையில் வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் அன்னவாசல், விராலிமலை வட்டாரத்துக்குட்பட்ட 60 விவசாயிகளுக்கு ரூ. 97 லட்சம் மதிப்பில் மானிய விலையில் பவர் டில்லர் கருவியும், 200 விவசாயிகளுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான மானிய விலையில் இயந்திர நெல் நடவு தொழில்நுட்பக் கருவியும், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் முதற்கட்டமாக 58 விவசாயிகளுக்கு ரூ. 15.95 லட்சம் மானிய மதிப்பில் கறவை மாடுகள் மற்றும் பயிர் சாகுபடிக்கான இடுப்பொருட்களும் என மொத்தம் 318 விவசாயிகளுக்கு ரூ. 1.19 கோடி மதிப்பீட்டில்
நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் தரமான விதைகள் உள்ளூர் சந்தை விலையை விட குறைவான விலையில் மாநில விதை மேம்பாட்டு முகமையில் அம்மா சேவை மையத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் சு. கணேஷ், வேளாண் இணை இயக்குநர் த. சந்திரசேகரன், துணை இயக்குநர் சதானந்தம், கந்தசாமி, உதவி இயக்குநர் சிங்காரம், ஒன்றியக் குழுத் தலைவர்கள் மு. சுப்பையா (விராலிமலை), இளவரசிவசந்தன் (அன்னவாசல்), ஆத்மா குழுத் தலைவர் எஸ். பழனியாண்டி, பி. சாம்பசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment