வலங்கைமான் பகுதியில் மழைக்குப் பின் நெற்பயிரில் ஏற்படும் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தேவேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வலங்கைமான் வட்டாரத்தில் வடகிழக்குப் பருவமழையால் சம்பா, தாளடி நெற்பயிரில் சூழ்ந்த மழைநீர், வடிந்த நிலையில் தற்போது பூச்சி, நோய்த் தாக்குதல் சில இடங்களில் தென்படுகிறது. தற்போதைய காலநிலையில் நெற்பயிரில் தோன்றும் குருத்துபூச்சி, இலைசுருட்டுபுழுவைக் கட்டுபடுத்த ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோ குளோரைடு என்ற மருந்தை 400 கிராம் வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
இளம்பயிரில் காணப்படும் ஆணைகொம்பன் பூச்சித் தாக்குதலைக் கட்டுபடுத்த ஏக்கருக்கு குளோர்பைரிபாஸ் 500 மி.லிட்டர் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
நெற்பயிரில் பாக்டீரியல் இலைகருகல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கட்டுப்படுத்த 20 சதவீதம் பசும்சாண கரைசலைத் தெளிக்க வேண்டும். 40 கிலோ பசும் சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து அதனுடன் 1 கிலோ சூடோமோனாசை இட்டு கலக்க வேண்டும்.
அடுத்த நாள் தெளிந்த சானகரைசலை வடிகட்டி 100 லிட்டர் தண்ணீரில் சேர்ந்து தெளிக்க வேண்டும் அல்லது ஒரு கிலோ சூடோமோனாசை ஒரு லிட்டர் புளித்த தயிருடன் 200 லிட்டர் தண்ணீரில் சேர்ந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
Source : Dinamani
No comments:
Post a Comment