Monday, January 4, 2016

பருத்தியில் அதிக மகசூல்: இரு விவசாயிகளுக்கு விருது


கோவை மாவட்டத்தில் தரமான பருத்தி உற்பத்தி செய்து, அதிக மகசூல் எடுத்த 2 விவசாயிகளுக்கு இந்திய பருத்திக்கழகம் சார்பில் விருது வழங்கப்பட்டது.
 இந்தியப் பருத்திக் கழகம் சார்பில் தேசிய அளவில் அதிக அளவில் பருத்தி உற்பத்தி செய்தல், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்காக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.
 இந்நிலையில் 2014-2015-ஆம் ஆண்டிற்கான விருதுக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அன்னூர் அருகே உள்ள அல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன், கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் பகுதியைச் சேர்ந்த தனராஜ் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஹரியாணா மாநிலம் குர்கானில் நடைபெற்ற இந்தியப் பருத்திக் கழகத்தின் ஆண்டு கூட்டத்தில் விருது, ரொக்கப் பரிசு தலா ரூ.11 ஆயிரம் வீதம்  வழங்கப்பட்டது.
 விருது பெற்ற அன்னூர் விவசாயி காளியப்பன் கூறுகையில்,"எனது தோட்டத்தில் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் செயல் விளக்கத் திடல் அமைக்கபட்டு, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பருத்தி உற்பத்தியில் அதிக மகசூலை பெற்றுள்ளதற்காக இந்த விருது வழங்கப்பட்டது' என்றார்.
 விவசாயி தனராஜ் கூறுகையில்,"மத்திய பருத்தி ஆராய்ச்சி கழகம் சார்பில் தரமான பருத்தி உற்பத்தி செய்ய 100 விவசாயிகளை தேர்வு செய்தது.
 தேவையான  ஆலோசனைகளையும், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் செய்தனர். இதனால் சராசரியாக 1 ஏக்கருக்கு 7-8 குவிண்டால் பருத்தி உற்பத்தி  கிடைப்பதை தற்போது 1 ஏக்கருக்கு 14 குவிண்டால் தரமான பருத்தி உற்பத்தி செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது' என்றார்.
 இவ்விருது தமிழ்நாட்டில், கோவை மாவட்டத்தில் மட்டும் இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு வேளாண் துறை அதிகாரிகள், விவசாயிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment