Tuesday, January 5, 2016

இலுப்பூரில் 318 விவசாயிகளுக்கு ரூ.1.19 கோடி நல உதவி

இலுப்பூரில் வேளாண் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் விவசாயிகள் 318 பேருக்கு ரூ.1.19 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட  உதவிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வேளாண் விற்பனைக்கூட வளாகத்தில் வேளாண் துறை  சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கணேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், விவசாயிகள் 318 பேருக்கு   பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: அன்னவாசல், விராலிமலை வட்டாரங்களைச் சேர்ந்த 60 பேருக்கு ரூ.97 லட்சம் மதிப்பீட்டிலான பவர் டிரில்லர் கருவிகளும், 200 பேருக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டிலான இயந்திர நெல் நடவு தொழில்நுட்ப கருவிகளும் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. இதே போல், தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கத்தின் கீழ் முதற்கட்டமாக 58 விவசாயிகளுக்கு ரூ.15.95 லட்சம் மானிய மதிப்பீட்டிலான கறவை மாடுகளும், பயிர் சாகுபடிக்கான இடுபொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த பண்ணையம் சார்ந்த பயிர் சாகுபடி முறையில் சாகுபடி மேற்கொள்ள வசதியாக தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கம் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் கறவை மாடுகள் மானியத்திலும், இவற்றுடன் நெல் மற்றும் பயறு வகை பயிர்கள் இருபோக சாகுபடி மேற்கொள்ள தேவையான வேளாண் இடுபொருட்கள் ஆகியன 50% மானியத்தில் ஒரு எக்டேருக்கு ரூ.27,500 வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இதில் கறவை மாட்டுக்கு ரூ.17,500, இருபோக பயிர் சாகுபடிக்கான இடு பொருட்ளுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் எக்டேருக்கு ரூ.27,500 மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு 115 எக்டேர் பரப்பளவில் அன்னவாசல் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது. மேலும், தரமான விதைகள் உள்ளுர் சந்தை விலையை விட குறைவான விலையில் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமையில் அம்மா சேவை மையத்தின் மூலம் ‘அம்மா சீட்ஸ்” என்ற பெயரில் வழங்கப்படுகின்றன என்றார். விழாவில் ஆர்டிஓ வேல்பிரபு, வேளாண் துறை கூடுதல் இயக்குநர் (ஓய்வு) ஷாஜகான், துணை இயக்குநர் கந்தசாமி, உதவி இயக்குநர்கள் .சிங்காரம், எட்வர்ட்ரிச், முத்தையா, மனோகரன், வேளாண் அலுவலர்கள் ஜெகதீஸ்வரி, அன்பரசன், ராஜசேகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவர் இரா.சின்னத்தம்பி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் சுப்பையா (விராலிமலை), இளவரசி வசந்தன் (அன்னவாசல்), ஆத்மா குழுத் தலைவர்கள் பழனியாண்டி (விராலிமலை), சாம்பிசிவம் (அன்னவாசல்) இலுப்பூர் பேரூராட்சி தலைவர் குரு ராஜமன்னார். இலுப்பூர் நகர அதிமுக செயலாளர் சத்யா ராஜேந்திரன், தாசில்தார் மனோகரன், விராலிமலை ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணன், பெரியசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, வேளாண் துறை இணை இயக்குநர் சந்திரசேகரன் வரவேற்றார். முடிவில் துணை இயக்குநர் சதானந்தம் நன்றி கூறினார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment