Tuesday, January 5, 2016

குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி பயன்படுத்த அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நெற்பயிரில் ஏற்பட்டுள்ள குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் குருமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் பரவலாக உள்ளது. இவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். பயிரின் அனைத்து பகுதிகளிலும் இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப் பகுதி, கதிர் பகுதி பூசணத்தால் தாக்கப்படலாம். இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப் படும். 

பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். தீவிர தாக்குதலின் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். இதுவே குலை நோய் ஆகும். கதிர் வெளிவந்தவுடன் பயிர்கள் சாய்ந்து விடும். கதிர் பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. மேகமூட்டமுள்ள வானம், தொடர் மழை மற்றும் தூரல்கள், அதிக அளவில் பயன்படுத்தப்படும் அம்மோனியம் சல்பேட் போன்ற தழைச்சத்து உரங்கள், காற்றின் ஈரப்பதம் 90 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும்போது குலை நோய் தாக்குதல் ஏற்படும்.

குலைநோய் தாக்குதல் தென்பட்டால் உடனடியாக ஒரு எக்கேருக்கு டிரைசைக்ளோசோல் மருந்து 400கிராம் அடித்து கட்டுப்படுத்தலாம். நோய் கட்டுப்பாட்டில் இல்லையெனில் மீண்டும் 10நாள் இடைவெளியில் ஒருமுறை மேற்கண்ட மருந்தினை அடிக்க வேண்டும். இந்நோயில் பிபிடி 5204நெல் அதிகம் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் நிலத்தை தினமும் கண்காணிக்க வேண்டும். நோய் தாக்குதல் இருந்தால் வட்டார வேளாண் அலுவலகத்தில் உடனடியாக தகவல் தெரிவித்து ஆலோசனை பெறலாம். மேற்கண்ட மருந்து வேளாண் விரிவாக்க மையம், தனியார் உரக்கடைகளில் தேவையான இருப்பு உள்ளது. வரும் ஆண்டுகளில் குலைநோயால் தாக்குதலுக்கு உள்ளாகும் பி.பி.டி 5204நெல் ரகத்தினை பயிர் செய்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dinakaran

No comments:

Post a Comment