Wednesday, August 12, 2015

விவசாயிகளுக்கு 'ஆர்கானிக்' சான்றிதழ்:வேளாண் இயக்குனர் ராமமூர்த்தி தகவல்


புதுச்சேரி:
'இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, 'ஆர்கானிக்' சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, வேளாண் இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்தார்.வேளாண் துறை ஆத்மா திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கம் மற்றும் ஆத்மா குழுக்களுக்கு பண்ணை இயந்திரம் வழங்கும் விழா தட்டாஞ்சாவடி வேளாண் துறை அலுவலத்தில் நடந்தது.விழாவில், வேளாண் துறை இயக்குநர் ராமமூர்த்தி பேசியதாவது:முன்னோர் காலம் காலமாக பயிரிட்டு வந்த பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி பரப்பு, நாளடைவில் குறைந்து விட்டது. பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கை சீற்றங்களை தாங்கி வளர்வதோடு, மருத்துவ குணங்களை கொண்டது. கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம், திணை உள்ளிட்ட பாரம்பரிய பயிர்களுக்கு, அதிக வரவேற்பு உள்ளதால், சந்தைப்படுத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.புதுச்சேரியில் விவசாய நிலங்கள் குறைந்தாலும், நெல் உற்பத்தி குறையவில்லை. இயற்கை விவசாயம் மூலம் பயிரிடப்படும் காய்கறிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள் தான் என்பதற்கு, அங்கீகாரம் பெற வேண்டும். அதற்கு கடந்த காலத்தில் தமிழகத்தை நம்பியே இருந்தோம். வரும் ஆண்டில், புதுச்சேரி வேளாண் துறையின் மூலம், ஆர்கானிக் சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
இயற்கை முறையில் பயிரிடப்படும் முருங்கை 1 கிலோ ரூ. 20 முதல் ரூ. 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டில் ஒரு கிலோ ரூ. 2,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளரிக்காய், பாகல் உள்ளிட்ட காய்கறிகளுக்கும் வெளிநாட்டில் டிமாண்ட் அதிகம். ஆனால், அவை இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டது என சான்றிதழ் அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment